சினிமா செய்திகள்

'என் பேரன் முதலமைச்சர் விஜய் வந்தப்போ பார்க்க முடியலையே..' மெர்சல் சிட்டுக்குருவி பாட்டி உருக்கம்!

என் பேரன் முதலமைச்சர் விஜய் மதுரைக்கு வந்து குழந்தைகளுக்கு தாய்மாமனாக தங்க மோதிரம் போட்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

முதலமைச்சர் விஜய், மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம், காந்தி அருங்காட்சியகத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேரில் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைக்க நேற்று மதுரை வந்திருந்தார். இந்த நிலையில், அவரை நேரில் சந்திக்க முடியாமல் போனது குறித்து 'மெர்சல்' படத்தில் அவருடன் நடித்த மூத்த துணை நடிகை 'சிட்டுக்குருவி' பாட்டி (சீனியம்மாள்) நெகிழ்ச்சியுடனும் உருக்கமாகவும் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேரனை பார்க்க முடியவில்லையே..

முதலமைச்சர் விஜய், மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம், காந்தி அருங்காட்சியகத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேரில் கலந்துகொண்டார். அத்துடன், புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், முதலமைச்சர் விஜயுடன் 'மெர்சல்' திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் 'சிட்டுக்குருவி பாட்டி' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் மதுரையைச் சேர்ந்த மூத்த நடிகை சீனியம்மாள் ஆவார். தனது சொந்த ஊரான மதுரைக்கு விஜய் வந்திருப்பதை அறிந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கூட்ட நெரிசல் மற்றும் சூழல் காரணமாக அவரை நேரில் சந்திக்க இயலாமல் போனது குறித்து வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் கூறியதாவது:

"என் பேரன் விஜய் மதுரைக்கு வந்து குழந்தைகளுக்குத் தாய்மாமனாக தங்க மோதிரம் போட்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என் பேரனை நேரில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், என்னால் அவரைப் பார்க்க வர முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை அவர் மதுரைக்கு வரும்போது கண்டிப்பாக என் பேரனை நேரில் சந்திக்க வேண்டும்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் வைரல்

நடிகர் அஜித் நடித்த 'விஸ்வாசம்' மற்றும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள சீனியம்மாள், விஜய்யை உரிமை எடுத்து 'என் பேரன்' எனக் கூறி பாசத்தோடு பேசியுள்ள இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT