

படத்தைப் பார்த்து ரசித்த இசையமைப்பாளர் தேவா, ஹிப்ஹாப் தமிழா ஆதியை நேரில் சந்தித்து அன்போடு முத்தமிட்டு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் இண்டிபென்டன்ட் இசை கலைஞராக தன் பயணத்தை தொடங்கி, ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும், ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வென்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் கானா இசையை பெருமைப்படுத்தும் விதமாகவும், கானா பாடல்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளித்த ‘தேனிசை தென்றல்’ தேவாவை கவுரவிக்கும் வகையிலும் நடிகர் கருணாஸ் மூலமாக முக்கிய வசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்திரைப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் தேவா, படத்தின் சுவாரசியமான திரைக்கதையையும் கானா கலைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார்.
படத்தைப் பார்த்து ரசித்த இசையமைப்பாளர் தேவா, ஹிப்ஹாப் தமிழா ஆதியை நேரில் சந்தித்து அன்போடு முத்தமிட்டு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தார். இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஹிப்ஹாப் ஆதி, "இது போதும் எனக்கு இது போதுமே" எனும் வரிகளுடன் தேவாவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி மற்றும் குஷ்பு தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம், திரையரங்குகளை இசை கச்சேரியாக மாற்றி வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் மெகா ஹிட் அடித்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.