தமிழ் திரையுலகில் முன்னணி இசைக்கலைஞராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அவரே இயக்கி, நடித்த 'மீசைய முறுக்கு' திரைப்படம் கடந்த 2017 ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைத்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக, படத்தின் இரண்டாம் பாகமான 'மீசைய முறுக்கு 2' எப்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதை நாளை மாலை 5 மணிக்கு அறிவிப்போம் என்று ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
தன் திரைப்பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லான 'மீசைய முறுக்கு' படம் குறித்து ஆதியின் பதிவில், "இது வெறும் ஒரு கனவாகத் தொடங்கியது. ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது" என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
2017 ஜூலை 21 அன்று வெளியான இப்படம், இளைஞர்களின் கனவுகள் மற்றும் நட்பைக் கொண்டாடியதால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக வெளியான இப்படத்தின் 'டைட்டில் டீசர்' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் 1980-கள் மற்றும் தற்காலம் என இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் பயணிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். குறிப்பாக, இந்திய பாரம்பரிய இசையின் மீதான பழமைவாதக் கருத்துக்களை சவாலாக எதிர்கொள்ளும் ஒரு இளம் இசைக் கலைஞராக ஒரு கதாபாத்திரத்தில் ஆதி மிரட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய பாகத்தைப் போலவே, இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்களை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா ஆகியோர் இப்படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
நாசர், ஆடுகளம் நரேன், கருணாஸ், ஷா ரா மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பப்பாளி பழமே' மற்றும் 'ஆரா 10/10' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.