ஹிப்ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு 2': செப்டம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்?

இப்படத்தின் 'ஆரா 10/10' பாடல் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Hiphop Adhi's Meesaya Murukku 2
Published on

இளம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் ஆதி இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். தற்போது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகமான 'மீசை முறுக்கு 2' உருவாகி வருகிறது.

நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைய உள்ளது.

தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், படத்தை வரும் செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான இப்படத்தின் 'டைட்டில் டீசர்' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் 1980-கள் மற்றும் தற்காலம் என இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் பயணிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். குறிப்பாக, இந்திய பாரம்பரிய இசையின் மீதான பழமைவாதக் கருத்துக்களை சவாலாக எதிர்கொள்ளும் ஒரு இளம் இசைக் கலைஞராக ஒரு கதாபாத்திரத்தில் ஆதி மிரட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய பாகத்தைப் போலவே, இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்களை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா ஆகியோர் இப்படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

நாசர், ஆடுகளம் நரேன், கருணாஸ், ஷா ரா மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் 'பப்பாளி பழமே' மற்றும் 'ஆரா 10/10' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. படப்பிடிப்பு முடிந்ததும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com