'சீன்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள மலையாள இளம் நடிகர் நஸ்லேனின் நடிப்பை அட்லீ வெகுவாக பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்லேன், நஸ்ரியா நஜிம், லால், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளைக் குவித்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
சூர்யாவின் நடிப்பையும், படத்தின் திரைக்கதையையும் பல முன்னணி சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பிரபல முன்னணி இயக்குநரான அட்லீ 'சீன்' படத்தைப் பார்த்துவிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சிறப்பான விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புதிய கதைக்களத்துடன் வந்த முழுமையான கமர்ஷியல் மற்றும் 'பைசா வசூல்' திரைப்படமாக இது அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள மலையாள இளம் நடிகர் நஸ்லேனின் நடிப்பை அட்லீ வெகுவாக பாராட்டியுள்ளார். நஸ்லேனின் திரை ஆளுமையையும் அவரது நடிப்புத் திறமையும் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறியுள்ள அவர், "நஸ்லேன், மை காட்! என்ன ஒரு நடிகர்! எதிர்காலத்தில் தமிழ் மற்றும் இந்திய திரையுலகை ஆளப்போகும் ஒரு சூப்பர் ஸ்டார் நீங்கள்தான்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த கணிப்பு தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்குத் திரும்பியுள்ள நஸ்ரியாவின் நகைச்சுவை உணர்வையும், அவரது கியூட்டான வெளிப்பாடுகளையும் அட்லீ சிலாகித்துப் பேசியுள்ளார். மேலும், இப்படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவனின் மேக்கிங், சூர்யாவின் அசத்தலான நடிப்பு, ஆனந்தராஜின் காமெடி மற்றும் சுஷின் ஷ்யாமின் இசை ஆகிய அனைத்தையும் அவர் பாராட்டியுள்ளார். படத்தைத் தயாரித்த ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் சூர்யா-ஜோதிகா தம்பதியினருக்கும் தனது வாழ்த்துகளை அட்லீ தெரிவித்துள்ளார். அட்லீயின் இந்த பதிவிற்கு நடிகர் சூர்யாவும் தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்து பதிலளித்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் இப்படத்தை ஏற்கனவே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.