

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் நூறாவது மைல்கல் திரைப்படமான 'கிங் 100' படத்தில் நடிகர் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் போஸ்டரில், அவர் 'கர்ணா' எனும் கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட, மிரட்டலான தோற்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில் அசோக் செல்வன் இந்தப் போஸ்டரில் காட்சியளிக்கிறார். நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி மற்றும் ஸ்டைலான மெரூன் நிறச் சட்டையுடன் நாற்காலியில் ஆளுமையான தோரணையில் அமர்ந்திருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, போஸ்டரில் இடம்பெற்றுள்ள குறியீடுகள் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. அவரது கையில் சிகரெட் மற்றும் புகை மூட்டமான இருண்ட பின்னணி மற்றும் அருகில் அலட்சியமாக வைக்கப்பட்டிருக்கும் காக்கி நிறக் காவல்துறை சீருடை.
முன்புறத்தில் 'கிங்' காயுடன் கூடிய சதுரங்கப் பலகை போன்ற கதையில் அசோக் செல்வனின் கதாபாத்திரம் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றன.
'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' ஆகிய படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் ர.கார்த்திக், 'கிங் 100' திரைப்படத்தை எழுதி இயக்குகிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, அசோக் செல்வன் ஆகியோருடன் நடிகை தபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜா மகாதேவன் ஒளிப்பதிவும், நவீன் நூலி படத்தொகுப்பும், N. சதீஷ்குமார் தயாரிப்பு வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர்.
கிறிஸ்துமஸ் விருந்தாக எதிர்வரும் டிசம்பர் 24-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.