திண்டுக்கல்லில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் ரசிகர்கள் முன் நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் செல்லா மற்றும் நடிகை மோக்ஷா ஆகியோர் அடங்கிய படக்குழுவினர் தோன்றினர். இவர்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். நடிகர், நடிகைகளிடம் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில், மதுரை மற்றும் தஞ்சாவூரைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் கட்டா குஸ்தி 2 படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு வந்துள்ளோம். நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இந்த பயணத்தில் இணைந்திருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் சென்னை திரும்பி விட்டார்.
தமிழகம் முழுவதும் ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பயங்கரமான வரவேற்பும், நல்ல விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல குடும்ப நகைச்சுவைத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியில் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
பொதுவாக ஒரு திரைப்படத்தின் முதல் பாகத்தை விட 2ம் பாகம் ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா என்ற பயம் படக்குழுவினருக்கு இருக்கும். அதனால் இப்படத்தின் திரைக்கதை மற்றும் கதையமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது முதல் பாகத்தை விட 2ம் பாகம் மிகச் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூலை, 2ம் பாகம் 3 நாட்களில் முறியடிக்கப் போகிறது. தனக்கு மிகவும் விசேஷமான இந்த மண்ணில் தனது திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.
குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் தியேட்டருக்கு வந்து இந்த ஜாலியான திரைப்படத்தைக் கண்டு ரசிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இசையமைப்பாளர் ஷான் ரால்டனின் இசையில் உருவான ‘சம்பவக்காரி’ பாடல் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. குழந்தை நட்சத்திரம் சாரா, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
சினிமாவில் எந்தவிதப் பின்னணியும் இன்றி நுழைந்து, தற்போது மக்களின் ஆதரவாலேயே தனது 12-வது திரைப்படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைப் பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.