நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஜெயிலர் 2." சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவில் மட்டும் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த் மீண்டும் களமிறங்கியுள்ள ‘ஜெயிலர் 2’படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.
அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சமீபத்தில் ஆன்லைனில் தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா மற்றும் அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அதிவேகமாக விற்றுத் தீர்ந்தன.
இதுவரை வெளியான அதிகாரப்பூர்வ மற்றும் திரை வர்த்தக தகவல்களின்படி, வெளியீட்டிற்கு முந்தைய டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டுமே இந்தப் படம் ரூ.11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரிகிறது. முன்பதிவில் மட்டுமே ரூ. 11 கோடியை கடந்துள்ளதால், வருகிற 15-ஆம் தேதி வெளியாகும் முதல் நாள் வசூல் மட்டுமே முந்தைய பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை எளிதில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் படம் மிக விரைவாக பல நூறு கோடிகளை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து இந்தப் படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. டிரெய்லர் படம் குறித்த எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படம் அதன் முதல் பாகத்தை விட பலமடங்கு அதிக வசூல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.