தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான மற்றும் அழுத்தமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் தனது 55-வது படமாக ‘ஓம்’ (OM - Chapter 1: Udhiram) படத்தில் நடித்துள்ளார்.
பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'ஓம்' திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'ஓம்' படத்தின் வெளியீட்டு தேதி அதிரடியாக மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முக்கியக் காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
'ஜெயிலர் 2' வெளியான அடுத்த நாளே 'ஓம்' திரைப்படமும் வெளியாகவிருந்ததால், பாக்ஸ் ஆபீஸில் இரு பெரிய படங்களுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்படும் சூழல் உருவானது.
இதனால் திரையரங்குகள் ஒதுக்கீடு மற்றும் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், 'ஓம்' படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப்பட வர்த்தக வட்டாரங்களின் கணிப்புப்படி, 'ஓம்' திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி அல்லது டிசம்பர் 2-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த வெளியீட்டு தேதி மாற்றம் குறித்து தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' அல்லது தயாரிப்புத் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.