சினிமா செய்திகள்

'இதயம் முரளி' போன்ற படங்களில் இனி நடிக்கக் கூடாது: அதர்வா ஓபன் டாக்!

இனிவரும் காலங்களில் முற்றிலும் மாறுபட்ட கதைக் களங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா ஆகியோருடன் இணைந்து அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அதர்வா, 'பராசக்தி' படத்தில் தான் ஏற்றிருந்த வில்லத்தனம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரம், தனது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையிலேயே மிக எளிதாக நடிக்க முடிந்த ஒன்றாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுதா கொங்கராவை நீண்ட நாட்களாகத் தெரிந்திருந்ததால், அந்தப் பாத்திரத்தின் உடல்மொழியைப் பிடிப்பதும், வசனங்களைப் பேசி நடிப்பதும் தனக்கு மிகவும் சுலபமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

'பராசக்தி' படத்திற்குப் பிறகுதான், தான் நீண்ட காலமாகத் தனது 'கம்ஃபர்ட் ஜோன்' எனப்படும் வழக்கமான பாணிகளுக்குள்ளேயே நடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததாக அதர்வா கூறியுள்ளார். இதனால் இனிவரும் காலங்களில் முற்றிலும் மாறுபட்ட கதைக் களங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார்.

தற்போது அவர் நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் அடுத்த ரிலீஸாகக் காத்திருக்கும் நிலையில், "இப்போது நான் 'இதயம் முரளி' படத்தில் நடித்துள்ளேன். ஆனால், என்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் இதைப்போல இருக்கக் கூடாது; இன்னும் தீவிரமான மற்றும் சுவாரசியமான என்டர்டெய்னராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்று அதர்வா விளக்கியுள்ளார்.

இதற்கிடையில், 'பராசக்தி' படத்தின் சம்பள நிலுவைத் தொகை ரூ.8.39 கோடியைத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனக்கு வழங்கவில்லை எனக் கூறி, இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் 'இதயம் முரளி' படத்தின் ரிலீஸுக்கும் இடைக்காலத் தடை கோரியுள்ளார். இந்தச் சர்ச்சை இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள சூழலில், அதர்வாவின் இந்த சமீபத்திய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.