சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ்-விக்னேஷ் கார்த்திக் இணையும் புதிய படம்!

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவு பெற்றுள்ளது.

'அடியே' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக கைகோர்த்துள்ளனர். தற்பொழுது இந்தத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

தெலுங்கில் பெரும் பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பேபி' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நடிகை வைஷ்ணவி சைதன்யா, இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் மற்றும் வைஷ்ணவி சைதன்யா இணையும் புதிய காம்போ ரசிகர்களிடையே இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'திட்டம் இரண்டு', 'அடியே' மற்றும் 'ஹாட் ஸ்பாட்' போன்ற வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இம்முறையும் ஒரு சுவாரசியமான வணிக ரீதியிலான பொழுதுபோக்குத் திரைப்படத்தை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.

சென்னையில் நடந்து வந்த இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.