தமிழகத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளராகவும், தொழில்துறை புரட்சியாளராகவும் திகழ்ந்த ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'GDN' திரைப்படத்தின் டிரெய்லர் அவரது பிறந்த ஊரான கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
'ஓஹோ எந்தன் பேபி' படப்புகழ் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில், நடிகர் ஆர்.மாதவன் ஜி.டி.நாயுடுவாக வாழ்ந்திருக்கும் இத்திரைப்படம், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் பின்னணியில் ஒரு வரலாற்றுப் பீரியட் டிராமாவாக உருவாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், தொழில்நுட்ப உலகில் இந்தியா தடம் பதிப்பதற்கு முன்பே எதிர்காலத்தைக் கணித்த ஒரு மேதையின் போராட்டங்களை கண்முன்னே நிறுத்துகிறது. தேசத்துரோகக் குற்றம், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களைக் கூறி, ஜி.டி.நாயுடுவின் அசாத்திய கண்டுபிடிப்புகளையும் அவரது தொழில் வளர்ச்சியையும் முடக்க பிரிட்டிஷ் அரசு தீவிரமாக முயல்கிறது.
டிரெய்லரின் ஒரு காட்சியில் பிரிட்டிஷ் அதிகாரி, "நாயுடு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஜெர்மனியுடனும் நாஜிக்களுடனும் கூட்டு சேர்ந்து தொழில் செய்கிறார், இது மன்னராட்சிக்கு எதிரான துரோகம்" என்று குற்றம் சாட்டுகிறார்.
அதற்குப் பதிலடியாக, "நீங்கள் எந்த மண்ணை ஆக்கிரமித்திருக்கிறீர்கள், யாரிடம் பேசுகிறீர்கள் என்பதை விரைவில் புரிந்துகொள்வீர்கள்" என்று மாதவன் பேசும் ஆக்ரோஷமான வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. "Feared by the British.. Forgotten by his countrymen"என்ற வாசகத்துடன் இந்த டிரெய்லர் நிறைவடைகிறது.
இப்படத்தின் திரைக்கதையை இயக்குநருடன் இணைந்து ஆர்.மாதவனே எழுதியுள்ளார். ஜி.டி.நாயுடுவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரையிலான வாழ்வை விவரிக்கும் இப்படத்திற்காக மாதவன் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, அவரது வயதான தோற்றம் அடையாளம் காண முடியாத அளவிற்கு அசாத்தியமான மேக்கப்புடன் மிரட்டலாக அமைந்துள்ளது.
இப்படத்தில் மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, அதிதி பாலன், டிஜே அருணாசலம், கனிஹா, கருணாகரன் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
'ராக்கெட்ரி, தி நம்பி எஃபெக்ட்' என்ற தேசிய விருது பெற்ற திரைப்படத்திற்குப் பிறகு வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் மாதவனின் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, அரவிந்த் கமலாநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திரைப்படம் வரும் 'ஜூலை 17-ஆம் தேதி' உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. கர்நாடகா மற்றும் வட இந்தியப் பகுதிகளில் இத்திரைப்படத்தை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான கரண் ஜோஹரின் 'தர்மா புரொடக்ஷன்ஸ்' விநியோகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.