சினிமா செய்திகள்

'கட்டா குஸ்தி 2'- திரை விமர்சனம்

பின்னணி இசை நகைச்சுவை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

Maalaimalar

கதை

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பயணிக்கும் கதையில், குழந்தை பிறந்த பிறகும் குஸ்தி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, அவரது கணவர் விஷ்ணு விஷால் முழு ஆதரவாக இருக்கிறார்.

வீட்டையும், குழந்தையையும் கவனித்துக் கொண்டு மனைவியின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும் அவர், ஐஸ்வர்யா லட்சுமியை தேசிய அளவிலான போட்டிக்கு தயார்படுத்துகிறார்.

இதற்கிடையே, அவர்களது மகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பாக கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மகளையும் சிறந்த குஸ்தி வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்று ஐஸ்வர்யா லட்சுமி நினைக்க, குழந்தையின் விருப்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் கருதுகிறார்.

இந்த சிறிய கருத்து வேறுபாடு குடும்ப வாழ்க்கையில் பெரிய பிளவை ஏற்படுத்தி, விவாகரத்து வரை செல்லும் சூழ்நிலையை உருவாக்குகிறது.

இறுதியில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்தார்களா? குடும்பமும் கனவும் இரண்டையும் காப்பாற்ற முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஷ்ணு விஷால், மனைவியின் வெற்றிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கணவராக மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பான கணவராகவும், தேவையான இடங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் திரையில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக மனைவி மீது வைத்திருக்கும் அன்பு, மகளுடனான பாசம் மற்றும் குடும்பத்திற்காக போராடும் காட்சிகளில் தனது அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, முதல் பாகத்தை விட இந்த முறையில் இன்னும் பலமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். குஸ்தி களத்தில் முரட்டுத்தனமாக மோதும் வீராங்கனையாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்ச்சிவசப்படும் மனைவியாகவும் இரு பரிமாணங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் குஸ்தி காட்சிகளில் அவரது உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.

தம்பதியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா, தனது சுட்டித்தனமான நடிப்பால் பல காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். கருணாஸ் வழக்கம்போல் தனது டைமிங் காமெடியால் சிரிக்க வைக்கிறார். மோக்‌ஷா, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு தேவையான அளவில் பங்களித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபுவின் வருகையும் படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்கம்

முதல் பாகத்தைப் போலவே இந்த முறையும் இயல்பான நகைச்சுவையுடன் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

குடும்ப உறவுகள், கணவன்-மனைவி புரிதல், குழந்தை வளர்ப்பு போன்ற சமகால பிரச்சனைகளை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்.

சில காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கும்படி இருந்தாலும், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பும், நகைச்சுவையும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்து இருக்கிறது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், குஸ்தி போட்டிகளையும் குடும்ப காட்சிகளையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், பின்னணி இசையும் உணர்வுப்பூர்வமான மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.