பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பிய ‘ஜிவா’ நகை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரம், பொதுமக்களின் தீவிர எதிர்ப்பை அடுத்து அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிரபல நகை பிராண்டான ஜிவா, ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கிருத்தி சனோன் நடித்த புதிய விளம்பரப் படத்தை வெளியிட்டது. அதில் கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை பண்டிகையின் கலாச்சாரத்திற்கு ஏற்ப இல்லை என்றும், உடலின் கழுத்துப்பகுதி மிகவும் திறந்த நிலையில் உள்ள ஆடையை அணிந்து கொண்டு ரக்ஷா பந்தன் கொண்டாடுவது போலக் காட்டப்பட்டதும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
மேலும், அந்த விளம்பரத்தில் அவர் தனது செல்லப் பிராணியான நாய்க்கும் ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பாரம்பரிய பண்டிகையையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த கிருத்தி சனோன், பண்டிகைகளின் சாராம்சம் நாம் அணியும் ஆடைகளில் இல்லை, பாரம்பரியத்தின் மீது நாம் வைத்துள்ள உணர்வுகளில்தான் உள்ளது என்று தெரிவித்தார். ஒரு பெண்ணின் கலாச்சார மரியாதையை அவருடைய ஆடையின் கழுத்துப்பகுதியை வைத்தா தீர்மானிப்பது எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார். நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத் இந்த விளம்பரத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிருத்தி சனோனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துப் பெண்ணின் ஆடை உரிமை குறித்துப் பதிவிட்டார்.
எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, ஜிவா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு விளம்பரத்தை அனைத்து ஊடகங்களிலிருந்தும் அகற்றியது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த நிறுவனம், குடும்பத்தினருடனும் செல்லப் பிராணிகளுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதே தங்கள் நோக்கமாக இருந்தது என்றும், சில பிரிவினரின் மனதை அறியாமல் புண்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி விளம்பரத்தை வாபஸ் பெற்றது.