பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியாகியுள்ள 'காக்டெய்ல் 2' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிக வலுவான வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், வார இறுதி நாளான நேற்று திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதால் படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது.
ரிலீசான முதல் நாளான வெள்ளிக்கிழமையன்று இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ.13.50 கோடி வசூலித்த இத்திரைப்படம், இரண்டாம் நாளான நேற்று சுமார் ரூ.16.25 கோடியை வாரிக் குவித்துள்ளது. இதன் மூலம் வெறும் இரண்டே நாட்களில் இந்திய அளவில் மட்டும் இந்தத் திரைப்படம் ரூ.29.75 கோடி நிகர வசூலையும், ரூ.35.70 கோடி மொத்த வசூலையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பாசிட்டிவான கருத்துக்கள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதால், இன்றைய முடிவில் இந்தத் திரைப்படம் எளிதாக ரூ.50 கோடி வசூலை எட்டும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இயக்குநர் ஹோமி அதாஜானியா இயக்கத்தில், தினேஷ் விஜன் மற்றும் லவ் ரஞ்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், 2012-ல் சைப் அலிகான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'காக்டெய்ல்' படத்தின் ஆன்மீகத் தொடர்ச்சியாகும்
கல்லூரி காலத்திலிருந்தே ஒருவரையொருவர் ஆழமாகக் காதலிக்கும் குணால் (ஷாஹித் கபூர்) மற்றும் தியா (ராஷ்மிகா மந்தானா) ஜோடி, திருமண பந்தத்தில் இணைவதற்கு தயக்கம் காட்டுகிறது. இதற்கிடையில் அவர்கள் சிசிலி தீவிற்கு சுற்றுலா செல்லும்போது, தியாவின் நெருங்கிய தோழியான அலி-யை (கீர்த்தி சனோன்) சந்திக்கின்றனர். குணால் தன் மீது கொண்டுள்ள காதல் உண்மையானதா அல்லது கடமைக்காகத் தன்னைத் திருமணம் செய்ய நினைக்கிறாரா என்ற சந்தேகம் தியாவிற்குள் எழுகிறது.
இதனால் தன் காதலைச் சோதிக்க, குணாலுடன் நெருக்கமாகப் பழகுமாறு தனது தோழி அலியையே தியா தூண்டிவிடுகிறார். இந்த விபரீத காதல் சோதனையும், அதனால் ஏற்படும் சுவாரசியமான திருப்பங்களுமே படத்தின் முழுக் கதையாகும். படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதைத் தொடர்ந்து, நடிகை கீர்த்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த வித்தியாசமான கதாபாத்திரத்தை நம்பி தனக்கு வழங்கிய இயக்குநர் ஹோமி அதாஜானியாவிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், சக நடிகர்களான ஷாஹித் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானாவுடன் இணைந்து நடித்தது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அழகான பயணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.