இந்திய கர்நாடக இசைத்துறையின் முன்னணி ஆளுமையும் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பயோபிக் திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஜெர்சி' திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற இயக்குனர் கவுதம் தின்னனுரி இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த், பன்னி வாஸ் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றனர். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிறு வயது இசைப் பயணம் தொடங்கி சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகியாக மாறியது வரையிலான அவரது சாதனைகளை இத்திரைப்படம் விரிவாகப் பதிவு செய்யவுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவி, ருக்மிணி வசந்த், நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. குறிப்பாக, சாய் பல்லவி முதன்மைத் தேர்வாக இருந்தபோதிலும், பிற திரைப்படப் படப்பிடிப்புகளின் கால அவகாசம் காரணமாக அவர் இத்திட்டத்தில் இருந்து விலகினார். இறுதியாக, ராஷ்மிகா மந்தனாவின் நடிப்புத்திறன் மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் அவரை இக்கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்துள்ளனர்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று இத்திரைப்படத்தின் பெயர், பிற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்திய இசை பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட இக்கதாபாத்திரம் ராஷ்மிகா மந்தனாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.