நாயகி இவானாவை காதலிக்கும் இளைஞர் கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன்பிறகும் அவரை திருமணம் செய்ய வரும் நபர்களுக்கு தொடர்ந்து மரணம் நிகழ்கிறது.
இது சாதாரண சம்பவம் இல்லை என்பதை காவல்துறை கண்டுபிடிக்க, இந்த வழக்கு போலீஸ் அதிகாரி பிரஜினிடம் வருகிறது. இவானாவை மையமாக வைத்து விசாரணையை தொடங்கும் பிரஜின், அவரையே காதலிக்க தொடங்குகிறார்.
இறுதியில் பிரஜின் வாழ்க்கை என்ன ஆனது? இந்த தொடர் கொலைகளுக்கு பின்னால் இருப்பது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியாக வரும் பிரஜின், அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். விசாரணை காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இவானா வருண் கதையின் மையமாக வருகிறார்.
பயம், குழப்பம், பதற்றம் என பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியின் பெற்றோர்களாக வரும் எம்.கே. சாம்பசிவம், செந்தி குமாரி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
தொடர் கொலை, மர்மம், போலீஸ் விசாரணை என வழக்கமான கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராவணன். திரைக்கதையில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் வரை கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத வகையில் காட்சிகளை அமைத்திருப்பது படத்தின் பெரிய பலம்.
அதே நேரத்தில், சில கதாபாத்திரங்களின் பின்னணி முழுமையாக சொல்லப்படாததும், சில லாஜிக் குறைகளும் இருக்கின்றன. இருந்தாலும் அவை படத்தின் விறுவிறுப்பை பெரிதாக பாதிக்கவில்லை.
கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு, ஹரி.எஸ்.ஆர் பின்னணி இசை இரண்டுமே படத்தின் சஸ்பென்ஸ் உணர்வுக்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.