சினிமா செய்திகள்

கேரள திரையுலகில் சர்ச்சை: 'அம்மா' அமைப்பு தலைவர் ஸ்வேதா மேனன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டாக ராஜினாமா - பின்னணி என்ன?

அம்மா அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக 2 பெண்கள், தலைவர்; பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வாகினர்.

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் (AMMA) கடந்த 31 ஆண்டுக்காலமாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில், அதை உடைத்து அம்மா அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக 2 பெண்கள், தலைவர்; பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வாகினர்.

பொறுப்பு

ஸ்வேதா மேனன் தலைவராகவும், பிரபல பின்னணிக் குரல் கலைஞர் குக்கு பரமேஸ்வரன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

மேலும் ஸ்வேதா மேனன் தலைமையில் 17 பேர் கொண்ட பெண் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பதவியேற்று 10 மாதங்களில் ஸ்வேதா மேனனும், அமைப்பின் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் கூட்டாக ராஜினாமா செய்துள்ளனர்.

அதிகாரப் போட்டி

பதவிக்காலத்தின்போது தலைவி ஸ்வேதா மேனனுக்கும், பொதுச்செயலாளர் குக்கு பரமேஸ்வரனுக்கும் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது.

ஸ்வேதாவிற்குத் தெரியாமல் பொதுச் செயலாளர் குக்கூ பரமேஸ்வரனும், பொருளாளர் உன்னி சிவபாலும் இணைந்து அலுவலக மேலாளர் அதுல்யாவை பணிநீக்கம் செய்தனர்.

இது சர்ச்சையான நிலையில் அதுல்யா மீண்டும் பணியமர்த்தப்பட்டார். அத்துடன் பொருளாளர் உன்னி சிவபால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

நன்கொடை

இதனிடையே பிப்ரவரி மாதம் நடைபெற்ற குடும்ப சங்கமம் விழாவிற்காக ஒரு கோயில் அறக்கட்டளையிடமிருந்து ரூ.70 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டது.

இருப்பினும் நன்கொடை பெறப்பட்டது. அதற்கான கணக்கை காட்டாதது அமைப்புக்குள் விவாதத்தை ஏற்படுத்தியது.

அன்சிபா ஹசன்

அதிருப்தியில் இருந்த அன்சிபா ஹசனும் தனது இணைச் செயலாளர் பதவியை கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களான டினி டோம் மற்றும் லட்சுமி பிரியாவுக்கு எதிராக அவர் போலீசுல் புகார் அளித்தார். லட்சுமி பிரியாவும் அன்சிபா மீது புகார் அளித்தார்.

பொதுக்குழு கூட்டம்

தொடர் சர்ச்சைகளை தீர்க்க பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி அம்மா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நேற்று ​காக்கநாட்டில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னணி நடிகர்களில் மோகன்லால் மட்டுமே கலந்துகொண்டார். மம்மூட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை. மேலும் இக்கூட்டத்தில் குடும்ப சங்கமம் விழாவிற்காக பெறப்பட்ட தொகை குறித்து குறித்த விவாதம் நடந்தது.

ராஜினாமா

நடிகர் பாபுராஜ் ஜாக்கோப் தலைமையிலான உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ​இந்த தீர்மானத்தில் தான் நடுநிலை வகிப்பதாக மோகன்லால் அறிவித்தார்.

நிர்வாகக் குழுவுக்கு இடையே நடந்த சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால், ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் கூட்டாக ராஜினாமா செய்தது.

ஸ்வேதா மேனன் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தற்காலிகக் குழு அமைக்கப்பட்டு ரமேஷ் பிஷாரடி தலைமையேற்றுள்ளார்.