சினிமா செய்திகள்

'அருள்வான்' படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யா

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கணேஷ் விநாயகன் எழுத்து மற்றும் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அருள்வான்’. இப்படத்தில் இவருடன் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பேபி கிருத்திகா, காளி வெங்கட், வி.டி.வி கணேஷ் மற்றும் ஜான் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘அல்லிப்பூவே’ அண்மையில் வெளியானது. யுகபாரதியின் வரிகளில், ஜி.வி.பிரகாஷ் குரலில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சூர்யா வெளியிட்ட டிரெய்லர்

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ‘அருள்வான்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கதைக்களம் என்ன?

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகவும் எமோஷனலாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், அங்குள்ள குழந்தைகளின் கல்வி உரிமையையும் பேசும் படமாக ‘அருள்வான்’ அமைந்துள்ளது.

டிரெய்லரில், ஒரு துணிச்சலான இளம் பழங்குடிப்பெண், தன் மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரை தேடி வருகிறாள். அவளது கோரிக்கையை ஏற்று, அந்த மலைக்கிராமத்திற்கு கல்வி கொண்டு சேர்க்கப் போராடும் நேர்மையான கலெக்டர் கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் அந்த கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். டிரெய்லரில் வரும், "நம்ம குடியில ஒருத்தன் படிச்சிருந்தா கூட நம்மள நம்ம சொந்த மண்ணை விட்டு துரத்திருக்க மாட்டாங்க" என்ற வசனம் படத்தின் ஆழத்தை உணர்த்துகிறது.