சினிமா செய்திகள்

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது தீவிர ரசிகர் மன்ற சந்திப்புகளை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

அமைப்பு ரீதியான மாற்றமாக, தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார் நடிகர் தனுஷ்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த பெயர் மாற்றத்துடன், தனுஷ் நற்பணி இயக்கத்திற்கான புதிய கொடி மற்றும் லோகோ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டில் ஏற்கனவே நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

அதே பாணியில் தனுஷும் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியிருப்பதாலும், தொகுதி வாரியாக நிர்வாகிகளை வலுப்படுத்தி வருவதாலும், அவர் எதிர்காலத்தில் தீவிர அரசியலில் களம் இறங்குவதற்கான நடவடிக்கையாக இது இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.

இருப்பினும், தனுஷ் தரப்பிலிருந்து அவரது அரசியல் பிரவேசம் குறித்தோ அல்லது அரசியல் கட்சித் தொடங்குவது குறித்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தனுஷைத் தாண்டி நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது தீவிர ரசிகர் மன்ற சந்திப்புகளை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT