நான் சுயமாக உருவானவன் அல்ல, மக்களால் உருவாக்கப்பட்டவன்!- ரசிகர் சந்திப்பு நிகழ்வில் சிவகார்த்திகேயன் உருக்கம்

எனது ரசிகர்கள் எப்போதும் என் பக்கமே இருப்பார்கள், என்னை தொடர்ந்து ஆதரிப்பார்கள்.
Sivakarthikeyan
Published on: 
Summary

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு தனது திரைப் பயணத்தின் தொடக்க கால நினைவுகளையும், எதிர்கொண்ட விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டார்.

திரைத்துறைக்கு வந்த புதிதில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தனக்கு அளித்த அறிவுரை மற்றும் எழுப்பிய கேள்விகள் குறித்து சிவகார்த்திகேயன் பேசினார். அந்தத் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம், "உன் மீது ரசிகர்களுக்கு இருக்கும் இந்த ஈர்ப்பு மற்றும் கிரேஸ் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே இருக்கும். அவர்கள் எப்போதும் உன்னோடு இருக்க மாட்டார்கள். எனவே, ரசிகர்கள் மீது கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்து" என்று கூறியதாகத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், "எனது ரசிகர்கள் எப்போதும் என் பக்கமே இருப்பார்கள், என்னை தொடர்ந்து ஆதரிப்பார்கள்" என்று உறுதியாகக் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த தயாரிப்பாளர், "ரசிகர்கள் உன்னுடன் இருக்கலாம், ஆனால் அவர்களுடன் இருக்கும் அளவிற்கு நீ சினிமாவில் நிலைத்து நிற்பாயா? அதை மனதில் வைத்துக்கொள்" எனக் கூறியுள்ளார்.

தயாரிப்பாளரின் அந்தச் சவாலான பேச்சுக்குத் தனது உழைப்பாலும், தொடர் வெற்றிகளாலும் தற்போது பதிலடி கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிகழ்விற்கு வந்திருந்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தான் ஒரு 'சுயமாக உருவான நட்சத்திரம்' அல்ல என்றும், மாறாக 'மக்களால் உருவாக்கப்பட்ட நட்சத்திரம்' என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படம், திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகாமல் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலையும் அவர் இந்த நிகழ்வில் உறுதிப்படுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com