சினிமா செய்திகள்

மாஸ் இயக்குநர்களுடன் இணையும் நடிகர் அதர்வா...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அடுத்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இப்படத்தில் நடிகர்கள் அதர்வா மற்றும் பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அதர்வா தற்போது ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. ‘இதயம் முரளி’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். கமர்ஷியல் திரைப்படமாக அமைய உள்ள இப்படத்தை Stone Bench Productions தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாமி தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது மனைவியுடன் வந்து நேற்று சாமி தரிசனம் செய்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவிலில் கார்த்திக் சுப்பராஜை கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இயக்கிய படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் இயக்கத்தில் வெளியான பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்பட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.