சினிமா செய்திகள்

‘ஆடை’ படத்தில் ஆடை இன்றி நடித்தது சவாலானது; இப்போது அந்த முடிவை எடுக்க மாட்டேன்: அமலா பால் வெளிப்படை!

வாழ்க்கையிலும் திரைப் பயணத்திலும் வயது மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப முன்னுரிமைகள் மாறுவதே சிறந்தது.

படப்பிடிப்பின் போது மிகக் குறைந்த அளவிலான நபர்களே தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டதாகவும், படக்குழுவினர் தனக்கு முழுப் பாதுகாப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை அமலா பால், தான் நடித்த 'ஆடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும், அது தொடர்பாக எடுத்த சவாலான முடிவுகள் குறித்தும் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இப்படத்தில் பல காட்சிகளில் ஆடை ஏதும் இன்றி நடிக்க வேண்டிய சூழல் இருந்தது குறித்துப் பேசிய அமலா பால், இந்தத் கதையைக் கேட்டவுடன் உடனடியாக சம்மதிக்கவில்லை என்று கூறினார். "கதையை இயக்குநர் அணுகிய விதம், அது வெறும் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது கதையின் தீவிரமான உணர்ச்சியை வெளிப்படுத்தப் பயன்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன. இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் முழுமையாக நம்பிய பிறகே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்," எனத் தெரிவித்தார்.

படப்பிடிப்பின் போது மிகக் குறைந்த அளவிலான நபர்களே தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டதாகவும், படக்குழுவினர் தனக்கு முழுப் பாதுகாப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் எவ்வித சங்கடமும் இன்றி ஒரு படைப்பாக அதை செய்து முடிக்க முடிந்ததாகத் தெரிவித்தார்.

இன்றைய சூழலில் சாத்தியமா?

அக்காலகட்டத்தில் அத்தகைய துணிச்சலான முடிவை எடுத்தது குறித்துப் பெருமைப்படுவதாகக் கூறிய அமலா பால், ஆனால் இப்போதுள்ள சூழலில் அதே போன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பேனா என்று கேட்டால், கண்டிப்பாக மாட்டேன் என்றே தோன்றுகிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். வாழ்க்கையிலும் திரைப் பயணத்திலும் வயது மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப முன்னுரிமைகள் மாறுவதே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

SCROLL FOR NEXT