

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் லட்சுமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சைத்ரா ஜே ஆச்சார், இப்படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்தும், தனது தாயாரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது குறித்தும் மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் "நம்பிக்கை என்பது ஒரு நல்ல விஷயம், ஒருபோதும் அது அழியாது" என்ற வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
2017-ல் வெளியான 'மீசைய முறுக்கு' முதல் பாகம் வெற்றிபெற முயற்சிப்பதன் முக்கியத்துவத்தைப் பேசியது என்றால், தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகம் திறமைக்கான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதன் முக்கியத்துவத்தைப் பேசுகிறது என்று சைத்ரா குறிப்பிட்டார்.
இப்படத்தில் வடசென்னை பின்னணியில் கானா பாடகராக வரும் 'தாஸ்' (ஹிப்ஹாப் தமிழா ஆதி) கதாபாத்திரத்தின் மனைவியாக, 'லட்சுமி' என்ற துணிச்சலான, வெளிப்படையாகப் பேசும் பெண்ணாக சைத்ரா நடித்துள்ளார். தன் கணவனுக்காக எந்த இடத்திலும் குரல் கொடுக்கும், அதே சமயம் தவறைச் சுட்டிக்காட்டத் தயங்காத ஒரு வலுவான பாத்திரமாக லட்சுமி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கதாபாத்திரத்திற்காக இயக்குநர்கள் தன்னை அணுகியபோதே, சைத்ரா தான் இந்த பாத்திரத்தை செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்ததாகவும், அதுவே தனக்கு சுதந்திரமாக நடிக்கப் பெரும் ஊக்கமளித்தது என்றும் அவர் கூறினார்.
சைத்ரா இதற்கு முன்பு நடித்த படங்களில் பாடல்கள் பெரும்பாலும் மாண்டேஜ் காட்சிகளாகவே இருந்தன. ஆனால், 'மீசைய முறுக்கு 2' படத்தில் பப்பாளி பழமே போன்ற பாடல்களுக்கு நடனமாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சைத்ரா, "திரைப்படங்களில் நான் ஏன் நடனமாடுவதில்லை என்று என் அம்மா எப்போதும் வருத்தப்படுவார்.
அதனால், இந்த படத்தில் நான் நடனமாடுவதைப் பார்த்து என்னை விட என் அம்மா தான் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்த படத்தின் மூலம் என் அம்மாவின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஏற்கனவே கன்னடம் மற்றும் தமிழில் ராஜ் பி ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டி, சித்தார்த், சசிகுமார் போன்ற பன்முகத் திறமையாளர்களுடன் பணியாற்றியுள்ள சைத்ரா, தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஆதி ஒரே நேரத்தில் இயக்கம், இசை, நடிப்பு எனப் பல துறைகளைக் கையாளுவதைப் பார்ப்பதற்கு வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்றார்.
மேலும், தனக்கும் புகைப்படம் எடுத்தல் மற்றும் பாடுவதில் ஆர்வம் இருப்பதால், எதிர்காலத்தில் சொந்தமாக கதை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் படம் இயக்குவேன் என்றும், அது தனது சொந்த அனுபவத்தில் இருந்து உலகளாவிய கதையாக இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து கிராமப்புறம் அல்லது எளிய பின்னணி கொண்ட கதாபாத்திரங்களிலேயே நடிப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "யாரும் என்னை ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் முடக்கி வைக்கவில்லை .
இந்த கதாபாத்திரங்களை நானே விரும்பித் தேர்வு செய்கிறேன். ஒரே மாதிரியான பின்னணி என்றாலும், புடவை கட்டும் விதம் முதல் உடல்மொழி வரை ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டி வருகிறேன்" என்று பதிலளித்தார்.
தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'பௌசி' , மற்றும் '418' ஆகிய படங்களில் நடித்து வரும் சைத்ரா, தமிழில் மேலும் மூன்று சுவாரசியமான திரைப்படங்களில் முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருவதாகவும், அவை அனைத்தும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்