29 வயதாகியும் வாழ்க்கையில் தனக்கென்று ஒரு அடையாளம் இல்லாமல் தடுமாறும் இளைஞனாக நாயகன் விது வாழ்ந்து வருகிறார்.
அந்த நேரத்தில் அவரது வாழ்க்கைக்குள் வரும் நாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதல், அவருக்கு ஒரு புதிய அடையாளத்தையும், வாழ்வின் அர்த்தத்தையும் கொடுக்கிறது.
காதலே வாழ்க்கை என்று நம்பி வாழும் விதுவுக்கு, காதலை தாண்டியும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை புரிய வைக்க முயற்சிக்கிறார் பிரீத்தி. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைய, காதலை முறித்துக்கொண்டு பிரிந்து செல்ல முடிவு செய்கிறார்.
இறுதியில் விது, பிரீத்தி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இருவரின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்துள்ள விது, பக்கத்து வீட்டு இளைஞன் போன்ற எளிமையான தோற்றம், காதல் தோல்வியால் உடைந்து போகும் மனநிலை, காதலியை மீண்டும் பெற வேண்டும் என்ற ஏக்கம் ஆகியவற்றை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அம்மாவுடன் வரும் காட்சிகளிலும், காதலியுடன் இருக்கும் தருணங்களிலும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் பிரீத்தி அஸ்ரானி, படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். காதலியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை புரியவைக்கும் துணையாகவும் தனது கதாபாத்திரத்தை அழகாக சுமந்திருக்கிறார். கண்களிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் பல காட்சிகளில் அவர் கவனம் ஈர்க்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்துள்ள அவினாஸ், படத்தின் இறுக்கமான மனநிலையை அவ்வப்போது லேசாக்குகிறார். மாஸ்டர் மகேந்திரன், ஆதிரா பாண்டியலக்ஷ்மி, சிந்து ஷியாம் உள்ளிட்டவர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர்.
காதலை வெறும் கனவாக இல்லாமல், வாழ்க்கையின் ஒரு பகுதியாக மிகவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். “எவ்வளவு காதலித்தாலும், வாழ்க்கை அதைவிட பெரியது” என்ற கருத்தை எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல், கவித்துவமான காட்சிகள் மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர் ரத்னகுமார், காதலை கொண்டாடியதோடு, அதில் மூழ்கி வாழ்க்கையை இழக்கக்கூடாது என்பதையும் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, கடற்கரை காதல், பேருந்து பயணங்கள், சென்னை நகரத்தின் தனிமை என அனைத்தையும் அழகாக பதிவு செய்துள்ளது.
ஷான் ரோல்டனின் இசை படத்தின் ஆன்மாவாகவே இருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் காதலின் சந்தோஷத்தையும், வலியையும் பார்வையாளர்களிடம் அழுத்தமாக கடத்துகிறது.