சினிமா

குடிபோதையில் கார் ஓட்டியதாக சினிமா படஅதிபர் பி.எல்.தேனப்பன் மீது வழக்கு

சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டியதாக பிரபல சினிமா பட தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PLThenappan

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் நள்ளிரவில் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின் போது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் பலர் சிக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் கதீட்ரல் சாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று இரவு 11.45 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர்.

அதில் சினிமா தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இருந்தார். அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பி.எல்.தேனப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு தேனப்பன் சென்றார். பின்னர் இன்று அதிகாலை 2 மணிக்கு தேனப்பன் தனது காரை காணவில்லை என்று ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால் போலீசார் நடந்த சம்பவத்தை விளக்கி கூறி புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பினர்.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் சென்று, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் சிக்குவது குறிப்பிடத்தக்கது. #PLThenappan

SCROLL FOR NEXT