துலாம் ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
அவரோடு புதனும், சூரியனும் இணைந்து சஞ்சரிப்பதால் 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் உருவாகின்றது. ஏழரைச் சனி விலகி விட்டதால் இனி எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேறும்.
வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். இருப்பினும் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும்.
மிதுன - சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், இப்பொழுது 9-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார்.
எனவே தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும், முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். பாக்கிய ஸ்தானம் பலம்பெறுவதால் இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைத்தாலும், அது நினைத்தபடியே நன்மை தரும் விதம் அமையும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
மிதுன - புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரித்து சுக்ரனோடு இணையும் இந்த நேரம் நல்ல நேரம்தான்.
பாக்கிய ஸ்தானத்தில் புதனும், சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. அயல்நாட்டு முயற்சி ஆதாயம் தரும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.
கடக - சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி.க்கள் உங்களது வாடிக்கையாளர்களாக மாறுவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் நேரமிது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், புகழ் கூடும். மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். தம்பதியர்களின் ஒற்றுமை பலப்படும். பொருளாதார நிலை உயரும்.
இம்மாதம் குரு வழிபாடு குதூகலம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.