விருச்சகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்-2024

விருச்சிகம்-சமசப்தம குரு 60%

தைரியம் வலிமை நிறைந்த விருச்சிக ராசியினரே!

இதுவரை ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் நின்று பலன் வழங்கிய குருபகவான் மே 1, 2024 முதல் சம சப்தம ஸ்தானமான 7ம் மிடம் சென்று பலன் வழங்கவுள்ளார். சனி பகவான் 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் நின்று அர்தாஷ்டமச் சனியாக பலன் தந்து கொண்டு இருக்கிறார். ராகு பகவான் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், கேது பகவான் 11ம்மிடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

சமசப்தம குருவின் பொதுபலன்கள்

விருச்சிக ராசிக்கு 2, 5ம் அதிபதியான குருபகவான் சம சப்தம் ஸ்தானமான 7ம்மிடம் செல்கிறார். 7ம்மிடம் என்பது நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத்துணை, சமுதாய நட்பு, சம்பந்திகள் பற்றிக் கூறுமிடம். 2, 5ம் அதிபதியான குரு சமசப்தம ஸ்தானம் செல்வது விருச்சிகத்திற்கு ஆதாயமான அமைப்பு. ராசியை குரு பார்க்கும் இந்த ஓராண்டு உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போவதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. போராட்டமாக இருந்த வாழ்க்கை பூ பூக்கும் நந்தவனமாகும்.

எதையெல்லாம் அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவற்றை பட்டியலிட்டு திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். ஆன்ம பலம் பெருகும். 6ம்மிடத்தில் குரு நின்ற காலத்தில் ஏற்பட்ட நோய் தாக்கம் குறையத் துவங்கும். கடனால் பட்ட அவமானத்தில் இருந்து மீள்வீர்கள். காலை சுற்றிய பாம்பாக இருந்த பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாது. தடைகள் தகரும். செயல்களில் வேகம் கூடும்.

விருச்சிக ராசி அரசியல்வாதிகள் இந்த ஓராண்டுக்குள் இழந்த அரசியல் சாம்ராஜ்ஜியங்களையும் பொது மக்களின் ஆதரவையும் மீட்டுப் பெறுவீர்கள்.வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றிபெறும். புதிய தொழில், கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத்துணையுடன் நிலவிய கருத்து வேறுபாடு சீராகும். ஒரு வருட காலத்தில் வாழ்கையில் திருப்புமுனையான பல நல்ல சம்பவங்கள் நடக்கப் போகிறது.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம்மிடத்தில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. குரு கேது சம்பந்தம் கோடீஸ்வர யோகம். தெருக்கோடியில் ஐந்திற்கும், பத்திற்கும் அல்லாடிய நிலை மாறப்போகிறது. தனவரவு இரட்டிப்பாகும். செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். பங்குச்சந்தை முதலீடுகள் பல மடங்கு லாபத்தை பெருக்கித்தரும். என் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிட ஆள் இல்லையே என மனம் வருந்திய நிலை மாறும்.

நீங்கள் நாலு பேருக்கு உதவி செய்யும் படியாக உங்கள் வாழ்வாதாரம் உயரும். சமுதாய அங்கீகாரம் அதிகமாகும். உங்கள் ஆலோசனைக்கு ஒரு கூட்டமே காத்து கிடக்கும்.பிரபலமானவர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரலாம். வழக்குகளில் வெற்றி நிச்சயம். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் சம சப்தம பார்வை ராசியில் பதிகிறது.ஏழாமிடம் என்பது ஐந்தாம் பாவத்தின் பாவத் பாவம். அதாவது ஐந்தாம் பாவத்திற்கு வளர்ச்சியை கொடுக்கக் கூடிய பாவகம் ஏழாம் பாவகம். மனக் குழப்பம் விலகி தெளிவான மன நிலையுடன் சிந்தித்து செயல்படுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள்.

ஐந்தாமிடம் என்பது பூர்வீகம். குல தெய்வம். ஐந்தாமிடத்திற்கு பாவத் பாவமான ஏழாமிடத்திற்கு குரு செல்வதால் சிறிய இடப்பெயர்ச்சி செய்ய நேரும். குடியிருக்கும் வீடு, தொழில் நடத்துமிடம் என ஏதாவது ஒரு இடமாற்றம் செய்ய நேரும். வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் நான்கைந்து மாதங்கள் பூர்வீகம் வந்து செல்லலாம்.பூர்வீகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக குறுகிய காலம் வெளிநாடு சென்று வரலாம். பல்வேறு சுப பலன்கள் தேடி வந்து கொண்டே இருக்கும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் 9ம் பார்வை ராசிக்கு 3ம்மிடமான முயற்சி ஸ்தானத்தில் பதிகிறது. உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலமாகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம். நாடு மாற்றம் என அவரவர் வயதிற்கு தகுந்த நல்ல சுபமான மாற்றங்கள் நடக்கும்.

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் ஏற்படும் கடனுக்கு அல்லது குடும்பத்திற்கு நீங்கள் பணம் செலவு செய்ய நேரும். அவர்களின் சுமைதாங்கியாக இருக்க வேண்டிய காலம். அதனால் கருத்து வேறுபாடு வரும் என்பதால் கவனம் தேவை. செவித்திறன் குறைதல், சீழ்வடிதல் போன்ற காது தொடர்பான பாதிப்புகள் குறையும். ஆவணங்கள் தொடர்பான சர்ச்சைக்கள் முடிவுக்கு வரும்.

தொலைந்த ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். உயில் எழுத ஏற்ற காலம். நீண்ட நாள் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மன நிறைவும், நிம்மதியும் ஏற்படும்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

விருச்சிக ராசிக்கு 10ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு நிச்சயம் உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெரும். இதுவரை உங்களுக்கு போட்டியாகவும் பகையாகவும் இருந்தவர்கள் உங்களின் திறமை தெரிந்து நட்பு பாராட்டலாம்.

உங்களோடு இணைந்து தொழில் செய்ய முன்வரலாம். நிதி நிறுவனங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும். கோவில் திருப்பணியில் ஈடுபடும் ஆர்வம் வரும். தான தர்மம் செய்து புண்ணிய பலனை கூட்டுவீர்கள் குடும்ப, குல கவுரவத்தை உயர்த்த ஆண் வாரிசு பிறக்கும்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

விருச்சிக ராசிக்கு 9ம் அதிபதி மற்றும் பாக்கியாதிபதியாகிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில்பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும்.

திருமணம், குழந்தைபேறு வீடு, வாகன யோகம், புதிய தங்க நகைகள் என உங்கள் வயதிற்கு ஏற்ற விருப்பங்கள் தேவைகள் நிறைவேறும். உயர் கல்வி முயற்சி வெற்றியாகும்.பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தடைபட்ட குலதெய்வ வழிபாடு தொடரும். சித்தர்கள் மற்றும் ஆன்மீக குருமார்களின் நல்லாசி கிடைக்கும். ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15.5.2025 வரை)

விருச்சிக ராசிக்கு ராசி அதிபதி மற்றும் 6ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும். செய்யும் வேலைகளை தெளிவான மனநிலையோடு விரைவாக செய்து முடிக்க குருபகவான் உங்களுக்கு ஆசி வழங்குவார்.நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். உடலும், மனமும் புத்துணர்வு பெறும்.

குருவின் வக்ர காலம் (ராசி அதிபதி மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

வக்ரமடையும் காலத்தில் பஞ்சு மெத்தை இருக்கும்.தூங்க நேரம் இருக்காது. உணவு இருக்கும். சாப்பிட நேரம் இருக்காதது போன்ற அசெளகரியங்கள் வந்து போகும். சிறு சிறு இன்னல்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும் இது அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் கடன், ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் தேவை.

விருச்சிகத்திற்கு பாக்கியாதிபதி ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் திருமணம், குழந்தைபேறு, வீடு, வாகனம் போன்ற பாக்கியம் தொடர்பான செயல்களின் முயற்சிகள் இழுபறியாகும். தந்தை, தந்தை வழி முன்னோர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டை குறைப்பது நல்லது.

பெண்கள்

குடும்பத்திற்காக சளைக்காமல் உழைத்த பெண்க ளுக்கு முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும்.புதிய சிந்தனைகள் உதயமாகும். உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்வீர்கள்.பணியிட மாற்றம் கிடைக்கும். உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். இது வரை குண்டு மணி தங்கம் இல்லாத பெண்களுக்கும் நகை சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. சுப செலவுகள் அதிகரிக்கும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கருப்பை நோய் பாதிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.

மாணவர்கள்

ராசி மற்றும் முயற்சி ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால்பள்ளியில் ஆசிரியர் நடத்தும் போதே மனதில் பதிய வைத்து விடுவீர்கள். கல்வியில் ஆர்வம் மிகும்.சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர், மாணவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும். மாநில, மாவட்ட, பள்ளி அளவில் முதல் மாணவ மாணவியராக தேர்வடைவார்கள்.

 பரிகாரம்

2, 5ம் அதிபதி குரு சுக்ரன் வீட்டில் நின்று ராசியை பார்ப்பதால் பெளர்ணமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து சர்க்கரை பொங்கல் படையலிட குருபகவானால் உன்னத பலன் கிடைத்து தன்னிறைவு உண்டாகும்.