துலாம் 
துலாம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

துலாம் ராசிக்கு மூன்றாம் அதிபதியான குரு பகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலனாகும்.

துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குரு பகவான் 2.6.2026 முதல் 10மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்க போகிறார். தனது ஐந்தாம் பார்வையால் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் நான்காம் இடமான சுகஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தையும் பார்ப்பார்.

இது துலாம் ராசியினருக்கு செல்வ வளம் பெருகும் காலமாகும். சுகபோகமான வசதி வாய்ப்புகள் தேடி வரும் குரு பெயர்ச்சியாகும்.இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார்.இதனால் துலாம் ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.

தொழில் ஸ்தான குருவின் பொதுவான பலன்கள்

துலாம் ராசிக்கு மூன்றாம் அதிபதியான குரு பகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலனாகும்.பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது பழமொழி.தற்போது பத்தாம் இடத்தில் உச்சம் பெறும் குரு பகவான் தசாபுத்தி சாதகமற்றவர்களுக்கு தொழில் உத்தியோக ரீதியான சாதகமற்ற பலன்களை வழங்குவார். முதலீடு அதிகம் இல்லாத தொழில் பெரிய பாதிப்பை தராது.

கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவார்கள். வட்டி தொழில் , அடமானம் பிடித்தல் தகவல் தொடர்பு சாதனங்களான youtube facebook twitter போன்ற வலைதளங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுபவர்களுக்கும் இது உபரியான லாபத்தை பல மடங்கு பெற்று தரும். ஆறாம் அதிபதியாகி குரு பகவான் பத்தாமிடத்தில் உச்சம் பெறும்போது அரசு ஊழியர்களுக்கு இலாக்கா மாற்றம் ஊர் மாற்றம் வரலாம்.சிலர் மன உளைச்சல் காரணமாக வேலையை ராஜினாமா செய்யலாம்.

சிலர் லஞ்ச விவாகரத்தில் சிக்கலாம்.தனியார் துறையினர் மாற்று வேலைக்கு முயற்சி செய்யலாம்.அதிக முதலீட்டில் தொழில் செய்பவர்கள் கடன் வாங்கி புதிய முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். தொழில் உத்தியோகம் சார்ந்த பிரச்சனைகள் எந்த விதத்தில் வேண்டும் என்றாலும் வரலாம். புத்தியை தீட்டினால் பத்தாமிட குருவால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. நிதானம் கலந்த வேகம் பாதுகாப்பை பெற்று தரும்.

ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் ஐந்தாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. பணம் இருந்தால் முகத்தில் தனி கலை தெரியும். இப்போது பணம் எனும் தனம் உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.தேவைப்படும் போதெல்லாம் பணவசதி கிடைக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். அதிர்ஷ்டத்தை தேடி அலைந்த உங்களுக்கு திறமை முயற்சி பொறுமை உழைப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுத்து வெற்றியையும் குரு பகவான் வழங்குவார். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் பத்தமிட குரு பகவான் வளமான வாழ்க்கை வழங்குவார்.

கலைத்துறையினர் தனித் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு, கேதுக்கள் எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது.

ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் ஏழாம் பார்வை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் பதிகிறதுகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் பொருளாதார நிலை சீராகும். பற்றாக்குறை வருமானத்தில் நடந்த குடும்பம் தாராள தனவரவால் சமூக அங்கீகாரத்தை பெறுவீர்கள்.அனாவசிய செலவுகள் குறையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். சிலர் வாடகை வியாபார ஸ்தலத்தை சொந்த கட்டிடமாக மாற்றி விடுவார்கள்.

பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா பிரச்சனை சீராகும்.தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள்.

தாயின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சிறு சிறு பாதிப்புகள் சீராகும்.பூமி சம்பந்தமான வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.சிலருக்கு அதிக அலைச்சலால் வேலைப் பளுவால் உடல் அசதி இருக்கும்.மாணவர்கள் கல்வியில் தமக்கென்று தனித் தன்மையுடன் திகழ்வார்கள். அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க இது உகந்த காலமாகும்.

ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் ஒன்பதாம் பார்வை ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. சிலர் தேவையற்ற வம்பை விலை கொடுத்து வாங்கலாம். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஏற்படாது. மலைபோல் நம்பிய நபர்கள் ஏமாற்றலாம். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவுகள் ஏமாற்றலாம். அல்லது சூழ்நிலை கைதியாக யாரோ செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கலாம்.

குடும்பச் சொத்துக்கள் கைமாறிப் போகலாம். குடும்ப உறவுகளின் செயல்கள் மன வருத்தத்தை தரலாம். சிலர் தவறான உணவுப் பழக்கத்தால் கூடாத நட்பால், போதைப் பழக்கத்தால் தீராத நோயை வரவழைக்கலாம். சிலர் சட்டத்திற்கு புறம்பான விசயத்தில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கலாம். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து லாட்டாரி, ரேஸ் என பணத்தை இழக்கலாம்.

சிலர் கடன் பெற்று சொத்துக்கள் வாங்கலாம். சிலருக்கு ஜாமீன் சார்ந்த பிரச்சினைகளால் கடன் உருவாகலாம். கடன் வழங்க நிதி நிறுவனங்கள் வீட்டு வாசலுக்கே வந்து நிற்கும். உத்தியோகத்தைக் காப்பாற்றுவது உங்கள் கையில் உள்ளது. அலுவலகப் பிரச்சனையில் தலையிடாமல் இருந்தால் நிம்மதி நிலைக்கும்.

புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்

(2.6.2026 முதல் 18.6.2026 வரை)

துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்வீடு மாற்றும் வேலை மாற்றம் ஊர் மாற்றம் வரலாம்.கணவரின் ஆரோக்கிய குறைபாட்டால் கவலை அடைந்த பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும்.ஆயுள் குறைபாடு நீங்கும்.

மாங்கல்ய தோஷம் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் வசித்த தந்தை சொந்த ஊர் திரும்புவார்.சிலர் உடல் நல பாதிப்பிற்காக மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வார்கள்.

பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(19.6.2026 முதல் 19.8.2026) வரை

துலாம் ராசிக்கு 4,5ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வெற்றி வாய்ப்பு அதிகமாகும் காலம். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.சொத்துக்கள் மீதான வருமானம் பேச்சை மூலதனமாகக் கொண்ட ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், மார்க்கெட்டிங் துறையைச் சார்ந்தவர்கள், வக்கீல்களின் திறமைகள் போற்றப்படும்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை நிலைப்படுத்தும் கெளரவப் பதவிகள் கிடைக்கும்.நேர்மறை ஆற்றலுடன் செயல்பட்டால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். எதிர்காலம் பற்றிச் சிந்தனைகள் கூடும்.

ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)

துலாம் ராசிக்கு 9,12ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் எல்லாத் துறையிலும் மகத்தான வெற்றியைப் பெற்றிட முடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை விட அதிக முன்னேற்றம் பெற முடியும்.பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து பார்க்கும் வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைமை சீராக இருக்கும்.

நியாயமான ஆசைகள் நிறைவேறும் காலம்.திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். 26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து நிற்பதால்தனிமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும் மனம் எளிமையை விரும்பும். தீய கெட்ட சிந்தனைகள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.ஆன்மீகப் பணிகள் பொதுச் சேவையில் ஈடுபாடு கூடும்.

மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(1.11.2026 முதல் 13.12.2026 வரை)

அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழில் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும் சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். வேலையாட்களால் உருவான பிரச்சனைகள் சீராகும்.முதலாளி தொழிலாளி வேற்றுமைகள் மறையும். மனோதிடம் கூடும். 14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்கள் மேன்மை அடைவார்கள். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை அணிவித்து வழிபட வினைகள் அகலும்.சனிக்கிழமை கால பைரவரை வழிபட காலத்தால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406