சிம்ம ராசிக்கு 5,8ம் அதிபதியான குரு பகவான் 2.6.2026 முதல் பன்னிரெண்டாம் இடமான அயன சயன விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் நான்காம் இடமான சுகஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் ஆறாம் இடமான ருண, ரோக , சத்ரு ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்ப்பார்.
சிம்ம ராசியினருக்கு இது அஷ்டமச் சனியின் காலம் என்பதையும் மறக்கக்கூடாது. அதேபோல் 5.12.2026 வரை ராசியில் கேதுவும் சம சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பார்கள். கோச்சார கிரகங்கள் சற்று சுமாராக உள்ளது. தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களை எந்த கிரக பெயற்சியும் அசைக்க முடியாது.சுய ஜாதகரீதியான பலன் அறிந்து திட்டமிட்டு செயல்பட்டால் சிம்ம ராசியினர் வெற்றிவாகை சூடலாம்.
இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார்.இதனால் சிம்ம ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.
விரய குருவின் பொதுவான பலன்கள்
பொதுவாக சுப கிரகங்கள் விரய ஸ்தானத்திற்கு வருவது மிகச் சிறப்பாகும். குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு சென்றாலும் தனது விசேஷப் பார்வையால் சிம்ம ராசியினருக்கு தேவையான நற்பலன்களை வழங்கி விடுவார் என்பதால் கவலைப்பட தேவையில்லை.
மேலும் இந்த ராசியில் பிறந்தவர்கள் எதையும் தாங்கும் மனவலிமை படைத்தவர்கள் என்பதால் எத்தகைய இடையூறையும் எளிதில் கையாண்டு அடைய வேண்டிய இலக்கை அடைவார்கள். நீண்ட நாள் கனவுகள் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள இது உகந்த காலமாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சுப விசேஷங்கள் நடக்கும் ஆடம்பர செலவுகள் அதிகமாகும். ஆடம்பரச் செலவுகளை எதிர்கொள்ள கடன் பெற வேண்டிய சூழ்நிலைகளும் வரும். ஆடம்பரத்தையும் அவசியத்தையும் உணர்ந்து செயல்பட்டால் இந்த குரு பெயர்ச்சி பெரிய இழப்புகளை தராது. அதேபோல் குருவின் பார்வை படக்கூடிய இடங்கள் ஓரளவு சுபத்துவமான இடங்களாக இருப்பதால் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் அடைய முடியும்.
ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை நான்காம் இடமான சுகஸ்தானத்தில் பதிகிறது.வாழ்க்கையில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடிவரும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். பணிச்சுமை அதிகமாகும் ஓய்வு நேரம் குறையும். கடந்த காலங்களில் முடிக்க முடியாத பல தடைபட்ட செயல்களை இப்பொழுது நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்க பெறும் குடும்பத் தேவைகளில் பூர்த்தியாகும் கடந்த கால கடன்களில் இருந்து மீளக்கூடிய வகையில் நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும்.
தாய் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மிக அவசியம். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள் சிலர் பழைய சொத்தை விற்று விட்டு புதிய சொத்துக்கள் வாங்குவார்கள்.வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். இதுவரை சுமாராக படித்த மாணவர்கள் கூட கல்வியில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.இது விரய குரு காலம் என்பதால் இயன்ற வரை மனைவி மக்கள் பெயரில் சொத்து வாங்குவது சாலச் சிறந்தது. உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சாத்வீக உணவுகளை உட்கொள்ள வேண்டும்.தன்மையான பேச்சும் பழக்கவழக்கங்களும் சமுதாய அங்கீகாரத்தை உயர்த்தும்.
ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் சம சப்தம பார்வை ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மேல் பதிகிறது.ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட உறவினர்களுடன் பகை உருவாகும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. பிறர் மனதை நோகடிக்கும் விதமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். சிலருக்கு கடன் பெற்று அசையும் அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும்.
பகைவர்களும் நண்பர்களாவார்கள்.எதிரிகள் அடிபணிவார்கள்.அரசியல்வாதிகள்பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். பழைய கடன்களை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். சொத்துச் சேர்க்கை கூடும். பொருளாதார பற்றாக்குறைகள் அகலும். பார்க்கும் வேலையையும் நடத்திக் கொண்டிருக்கும் தொழிலையும் மாற்றக்கூடாது.
மாற்று முறை வைத்தியம் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.உத்தியோகத்தில் தனித்தன்மையுடன் விழிப்புடன் இருப்பீர்கள். முன்கோபத்தையும் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்தால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வரமாக இருக்கும்.
ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை அஷ்டமஸ்தானத்தில் உள்ள சனி பகவான் மேல் பதிகிறது. சிம்ம ராசிக்கு 5,8ம் அதிபதியான குருவிற்கும் 7,8ம் அதிபதியான சனிக்கும் பார்வை சம்பந்தம் உள்ளது. குரு,சனி சம்பந்தம் தர்ம கர்மாதிபதி யோகமாகும். சுமார் எட்டு மாத காலத்திற்கு கோச்சாரத்தால் ஏற்படக்கூடிய இந்த கிரக சம்மந்தம் சிம்ம ராசியினருக்கு அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்கும்.
தொழில் உத்தியோக ரீதியான மன உளைச்சல் சீராகும். பதவி உயர்வு ஊதிய உயர்வு உத்தியோக உயர்வு என விரும்பிய மாற்றங்கள் தேடி வரும்.பல புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் சிந்தித்து செயல்படுவது அவசியம் பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. அந்த பழமொழியை இப்பொழுது சிம்ம ராசியினர் கடைபிடிக்க வேண்டும்.
அதேபோல் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. தசா புத்திகள் சாதகமாக இருந்தாலும் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் இருந்தாலும் அஷ்டம சனி காலத்தில் செய்யக்கூடிய திருமணங்கள் பிரிவினையை அதிகப்படுத்துவதால் அடுத்த சனிப்பெயர்ச்சி வரை பொறுமையாக இருக்க வேண்டும்.எல்லா முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் மனதில் வந்து கொண்டே இருக்கும்.
புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்
(2.6.2026 முதல் 18.6.2026 வரை)
சிம்ம ராசிக்கு 5,8ம் அதிபதியான குருவின் சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிலருக்கு பிள்ளைகளால் பூர்வீக சொத்தால்அல்லது பங்குச் சந்தை அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களால் இழப்புகள் வழக்குகள் வரலாம்.சிலருக்கு அதிர்ஷ்டமாக பணம் தங்கம் கிடைக்கலாம்.
சிலர் தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்திலிருந்து இடம்பெயரலாம்.காதலால் அவமானம் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். வைத்தியத்தில் குழந்தை பேறு உண்டாகும.
பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(19.6.2026 முதல் 19.8.2026) வரை
சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம்பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த பொருத்தமான வேலை கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழிலில் நண்பர்கள் போல் நடித்து உங்களை ஏமாற்றலாம்.
கூட்டு வியாபாரத்தில் சிறு சிறு சறுக்கல் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும். அடமான சொத்துக்களை மீட்க வாழ்க்கை துணை மூலமாக பொருள் உதவி கிடைக்கும். கை கால் மூட்டு வலி சார்ந்த உடல் உபாதைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)
சிம்ம ராசிக்கு தன லாபாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் உயர்ந்த நிலையை எட்டி விட வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். எண்ணங்களும் விருப்பங்களும் ஆசைகளும் நிறைவேறும்.உபரி லாபத்தை சொத்துக்கள் தங்கம் பங்குச்சந்தையில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டபடி சுப காரியங்கள் பிரம்மாண்டமாக நடக்கும். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மன பேதம் மறையும்.சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்புமுனையான சம்பவங்களும் உங்களை மகிழ்விக்கும்.
26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். குருவும் கேதுவும் இணைந்து சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக உண்மையை பேச முடியாத நிலை உருவாகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான சில அசௌகரியங்கள் வரலாம்
மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(1.11.2026 முதல் 13.12.2026 வரை)
அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும் வெற்றியும் உண்டு நாணயம் நீடிக்கும். முதலீடு செய்வதற்கு அஷ்டம சனி தான் உகந்த காலம் என்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொத்துக்களில் சுப விரயங்கள் செய்யலாம். 14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது.தேவையற்ற எதிர்ப்பாலின நட்பை தவிர்க்கவும்.குழப்பமான மனநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கலாம்.
பரிகாரம்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹிருதயம் படிப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.செவ்வாய்க்கிழமை பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து முருகனை வழிபட நவகிரக பாதிப்புகள் அகலும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406