மிதுன ராசிக்கு குரு பகவான் 7, 10ம் அதிபதியான குருபகவான் இதுவரை ஜென்ம குருவாக பலன் கொடுத்துக் கொண்டிருந்தார். 2.6.2026 முதல் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செல்லப் போகிறார்.
இது மிதுன ராசியினருக்கு பொற்காலம் என்று சொல்லக்கூடிய வகையில் நல்லவிதமான முன்னேற்றங்கள் உண்டாகும். தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் ஐந்தாம் பார்வை ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் ஏழாம் பார்வை எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்திலும் ஒன்பதாம் பார்வை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திலும் பதியப்போகிறது.
இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார். இதனால் மிதுன ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.
தன குருவின் பொதுவான பலன்கள்
பொதுவாக குரு பகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் மாற்றம் தெரியும். வாக்கில்முப்பெரும் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி குடிபுகுவார்கள்.சுய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் அசுப கிரகங்களின் சஞ்சாரத்தால் ஏற்பட்ட திருமண தடைகள் அகலும்.
இந்த காலகட்டங்களில் உரிய பரிகாரம் செய்தால் ஜாதகத்தில் உள்ள வாக்கு தோஷம் அகன்று வாக்கு வன்மை பெறும்.குடும்பத்தில் தவறான வாக்கு பிரயோகத்தால் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் அகலும். இதுவரை வறுமையில் வாடியவர்களுக்கு பொருளாதாரம் மேன்மையால் நல்ல உணவு உடை கிடைக்கும்.
ஒருவர் வருமானத்தில் நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு நிலையான வருமானம் வரத் துவங்கும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். திறமைகளை வெளிக்காட்டி சிறப்படைய முடியும்.பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். ஐந்து பத்துக்கு அல்லாடிய நிலை மாறும்.
ஐந்தாம் பார்வை பலன்கள்
தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் ஐந்தாம் பார்வை ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது.ஆறாம் இடம் என்பது கடன் நோயை மட்டும் கூறக்கூடிய ஸ்தானம் அல்ல.ஒருவரின் உத்தியோகத்தை தீர்மானிக்கக்கூடியது ஆறாம் இடமாகும்.வாழ்க்கை வளர்ச்சி அடையும்.
மன நிம்மதியான நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட அவமானங்கள் மனக்கசப்புகள் மறையும். அரசு உத்தியோக முயற்சி வெளிநாட்டு வேலை முயற்சி பலிதமாகும். அரசு தனியார் ஊழியர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு இடப்பெயர்ச்சிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. நோய் நொடிகள் அகலும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.வைத்தியம் பலன் தரும். பழைய கடன்களை அடைத்து புதிய வாழ்வாரத்திற்கு வழி தேடுவீர்கள்.
வீடு வாகன கடன் தொழில் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். கட்சி மேலிடம் உங்களின் திறமையை அறிந்து அதற்கு தகுந்த மரியாதை வழங்கும். தொண்டர்கள் மத்தியில் உங்களின் பெயர் புகழ் பரவும்.வெற்றியைத் தேடி நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை வெற்றி உங்களைத் தேடி வரும்.
ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிகிறது. விபரீத ராஜயோகம் உங்களை வழிநடத்த போகிறது. தனஸ்தானத்தில் உச்சமடையப் போகும் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். பங்குச்சந்தை யூக வணிகம் மூலம் வருமானம் உயரும்.
சிலர் ஆயுள் காப்பீடு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்கலாம். எட்டாமிடம் எதிர்கால தேவைக்கு முதலீடு செய்யும் இடம் என்பதால் பிள்ளைகள் அல்லது குடும்ப நபர்களின் பெயரில் புதிய வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள்.புதிய அசைவும் அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும் திருமணம் குழந்தை பாக்கியம் சொத்து சேர்க்க என தடைபட்ட அனைத்து நிகழ்வுகளும் நடக்கும் சமுதாயத்தில் செல்வாக்கு சொல்வாக்கு ஓங்கும்.எதிர்காலம் பற்றிய பயம் அகலும்.சிலர் அறுவை சிகிச்சை மூலம் ஆரோக்கிய மேன்மையை அடைவார்கள். வழக்குகள் சாதகமாகும் அல்லது தீர்ப்புகள் ஒத்திப் போகும்.வெளியூர் வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் ஏற்பட்ட தடை தாமதங்கள் அகலும்.
ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை பத்தமிடமான தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழிலில் கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் மாறி நன்மைகள் நடக்கும்.திட்டமிடுதல் சாதகமாகும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.எதிலும் தைரியத்தோடு துணிச்சலோடு செயல்படும் ஆற்றல் மேம்படும்.சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும் திறமையோடும் கௌரவத்தோடும் செயல்பட்டு சிறப்படைவீர்கள்.
தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவானை குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையால் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும்.உங்கள் பெற்றோர்களும் முன்னோர்களும் செய்த தர்மம் உங்களை தொழில் மூலம் காக்கும் நேரம். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.தொழில் போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் ஆதாயமாக இருக்கும்.
கூட்டுத் தொழிலில் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை சீராகும்.டிசம்பர் மாதம் முதல் தன ஸ்தானத்தில் கேது பகவான் நுழைவதால் பெரிய முதலீட்டாளர்கள் சுய ஜாதக பரிசிலனை செய்து கொள்வது நல்லது.சில்லறை வியாபாரிகள் மொத்த விற்பனையாளர்களாக மாறக்கூடிய அமைப்பு உள்ளது.
புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்
(2.6.2026 முதல் 18.6.2026 வரை)
மிதுன ராசிக்கு 7,10ம் அதிபதியான குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் தனது சொந்த நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்திருமண தடை அகலும். நல்ல வரன் அமையும். வெளியில் சொல்ல முடியாமல் தவித்த கணவன் மனைவி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தெளிவான பேச்சு தைரியமான செயல்பாடுகள் பண்பான நடவடிக்கைகள் இவை அனைத்தும் சமுதாயத்திற்கு உங்களை அடையாளம் காட்டும். முடங்கி கிடந்த திறமைகள் வெளிப்படும். மனவேதனையை ஏற்படுத்திய சம்மந்திகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(19.6.2026 முதல் 19.8.2026) வரை
மிதுன ராசிக்கு 8,9ம் அதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்எதிர்பாராத உதவிகள் தேடி வரும்.ஆன்ம பலம் பெருகும்.பொதுவாக மிதுன ராசியினருக்கு மாமியார், கணவரும் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள்.
தற்போது மாமியாரும் கணவரும் உங்கள் திறமையை புரிந்து கொள்ளவார்கள். பெண்கள் சுய உதவிக் குழுவின் உதவியுடன் கடன் பெற்று புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.எளிதில் இலக்கை அடையக்கூடிய மார்க்கம் தென்படும்.
ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)
மிதுன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் சுகஸ்தான அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்தாய் வழியில் திரண்ட சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. தாய் வழி பூர்வீகச் சொத்தில் நிலவிய பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் பண்ணையாளர்கள் மீன் வளர்ப்பு தொழில் ரியல் எஸ்டேட் துறையினரின் வாழ்வாதாரம் உயரும். புதிய சொத்துக்கள் வாகனங்கள் சேரும்.தாய்வழி உறவுகளின் அன்பும் ஆசீர்வாதமும் மனதை மகிழ்விக்கும். நிலுவையில் உள்ள வாடகை வருமானங்கள் வசூல் ஆகும். 26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து பயணிப்பதால்எந்த செயலிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டும்.
ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. முன்பின் அறிமுகம் அல்லாத ரியல் எஸ்டேட் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறக்கூடாது. யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. பெண்களின் புத்திசாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் விரயங்களை குறைப்பது நல்லது.
மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(1.11.2026 முதல் 13.12.2026 வரை)
அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் மனம் அமைதியை விரும்பும்.எல்லாம் சரியாக நடந்தால் கூட இனம் புரியாத மன சஞ்சலம்கூடும்.சிலர் மன நிம்மதிக்காக குறுகிய காலம் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலம் சென்று வருவார்கள்.
14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.
வாழ்க்கையை பாதிக்கும் பெரிய முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரிய தொகை கடனாக கொடுப்பது வாங்குவது கூடாது.நேர்மையாக நியாயமாக உழைத்தால் எந்த கிரக பெயற்சியாலும் பாதிப்பு ஏற்படாது.
பரிகாரம்
மிதுன ராசியினர் புதன்கிழமை பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து முருகனை வழிபட நவகிரக தோஷம் குறையும்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்க நன்மைகள் பெருகும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406