கடக ராசியினருக்கு 6,9ம் அதிபதியான குரு பகவான் 2.6.2026 முதல் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக பலன்தார போகிறார்.
ஜென்ம குரு வனவாசம் செல்ல வைப்பாரா? அல்லது வாழ வைப்பாரா? என்ற சந்தேகம் கடக ராசியினருக்கு எழும்பும். சுய ஜாதக ரீதியான தசா புத்திகள் சாதகமாக இருந்தால் ஜென்ம குரு உங்களை வாழ வைப்பார். தசா புக்தி சாதகமற்றவர்கள் தொழில் உத்தியோகத்திற்காக வெளியூர் வெளிநாடு செல்ல நேரும்.ஜென்ம ராசிக்குள் வரும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்ப்பார்.
இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார்.இதனால் கடக ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.
ஜென்ம குருவின் பொதுவான பலன்கள்
ஜென்ம குருவின் காலத்தில் ராமர் வனவாசம் சென்றார் என்பது புராண கதையாகும். அதனால் ஜென்மத்தில் குரு வரும் காலத்தில் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம் ஏற்படுவது இயல்புதான். தற்போது ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சுமார் ஏழு மாத காலம் மட்டுமே ராசியில் சஞ்சரிப்பார். அதிசாரமாக சிம்மத்திற்கு செல்கிறார். அதன் பிறகு வக்கிரம் அடைகிறார். இப்படி பல்வேறு நிலைகளில் குருவின் சஞ்சாரங்கள் இருப்பதால் ஆறு ஏழு மாதங்கள் கண் இமைக்கும் முன்பு கடந்துவிடும்.
மனம் தளராத இறை நம்பிக்கை கடக ராசியினருக்கு பாதுகாப்பை பெற்று தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.மேலும் குருவின் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் பாக்கியஸ்தானம் பலம் பெறுவதால்இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் இது மீட்டு பெறக்கூடிய காலமாகவே இருக்கும் என்பதால் கடக ராசியினர் தன்னம்பிக்கையுடன் செயல்படலாம்.
இந்த காலகட்டத்தில் குருவின் பார்வையால் பல்வேறு அபரிமிதமான சுப பலன்கள் நடக்கப்போகிறது. இது உங்களின் வாழ்க்கையில் பொற்காலமாகும். இந்த பொற்காலம் மீண்டும் கடக ராசியினருக்கு 12 ஆண்டுகளுக்குப் பின்னரே வரும். கிடைத்த இந்த கொள்கை கால சந்தர்ப்பத்தில் உங்கள் வாழ்க்கைக்கு வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை பட்டியலிட்டு அடையக்கூடிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது.ஐந்தாம் இடம் என்பது பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் காதல் ஆகியவற்றை பற்றி கூறும் இடம் என்பதால் செல்வாக்கு திறமை மட்டும் கௌரவத்துடன் செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் பங்குச்சந்தை யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை வரவழைக்கும். தங்கம் வெள்ளி போன்றவற்றில் செய்த முதலீடுகளின் மதிப்பு பல மடங்கு உயரும்.சிறிய உழைப்பில் பெரிய வருமானத்தை பார்க்க போகிறீர்கள் இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு பெற போகிறீர்கள்.பல வருடங்களாக நிறைவேற்ற தவறிய தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற குரு பகவான் உதவி செய்வார். பூர்வீகச் சொத்துக்களின் நிலவிய மன சஞ்சலங்கள் அகலும்.
சிலர் பூர்வீக சொத்துக்களை நல்ல விலைக்கு விற்பார்கள். பல வருடங்களாக ஒருதலை காதலாக இருந்த உங்கள் காதலுக்கு இப்பொழுது சம்மதம் கிடைக்கும்.கண் திருஷ்டி செய்வினை தோஷம், புத்திர தோஷ பாதிப்புகள் அகலும். தடைபட்ட உயர் கல்வி வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனசஞ்சலம் அகலும்.
ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை சம சப்தம ஸ்தானமான களத்திர ஸ்தானத்தில் பதிகிறது.சுய ஜாதக ரீதியான களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் அகலும்.இதுவரை அது இது என்று காரணம் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தவர்கள் கூட இப்பொழுது திருமணத்திற்கு சம்மதிப்பார்கள்.
தடைபட்ட அனைத்து இன்பங்களும் மீண்டு வந்து சேரும்.உடலும் உள்ளமும் குளிரும் வகையில் மன நிம்மதி அதிகரிக்கும்.நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் சாதகமான பலனை அடையப் போகிறீர்கள். இதுவரை மன உளைச்சலை தந்த பங்குதாரர்கள் புரிந்து நடந்து கொள்வார்கள்.
புதிய தொழில் நட்புகள் உருவாகும்.காலமும் நேரமும் மிகச் சாதகமாக இருப்பது மிக அரிது. தற்போது உங்களுக்கு காலமும் நேரமும் சாதகமாக இருப்பதால் பொதுமக்களின் ஆதரவும் சமுதாய அங்கீகாரமும் கைகூடிவரும்.
ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. பருவ வயதினருக்கு தொழில் உத்தியோக ரீதியான இடப்பெயர்ச்சிகள் நடக்கலாம்.
வெளியூர் வெளிநாட்டில் வேற்று மதத்தினருடன் வேற்று மொழி பேசுவோருடன் வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு இது பொற்காலமாகும்.உற்பத்தி வியாபாரம் வருமானம் மூன்றும் சம விகித வெற்றியை பெற்று தரும். அரசு வழி ஆதாயம் உண்டு. குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் கூடும். குடும்ப குல விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
பிரபஞ்சத்தின் நல்லாசிகள் உங்களை மகிழ்விக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும்.
புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்
(2.6.2026 முதல் 18.6.2026 வரை)
கடக ராசிக்கு 6 ,9ம் அதிபதியான குரு சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் சுமார் 16 நாட்கள் சஞ்சரிக்கப் போகிறார். கடக ராசியினர் இந்த கிரகப் பயிற்சியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்.
திட்டமிடுதலை வெற்றியின் ரகசியம் என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்தி இறை நம்பிக்கையோடு முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த 2026 ஆம் ஆண்டு கடக ராசியினருக்கு பிறவி கடனையும் பொருள் கடனையும் தீர்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(19.6.2026 முதல் 19.8.2026) வரை
கடக ராசிக்கு 7,8ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் குடும்பத்தில் நிலவிய கடும் வேதனை பசி பட்டினி, அழுகை, தரித்திரம் நீங்கும். கடன் சுமை குறையும்.தொழில் கூட்டாளிகள் ஒருவர் விஷயத்தில் மற்றவர் தலைடாமல் இருப்பது நல்லது.
தற்போது கோச்சாரத்தில் எட்டாம் இடத்தில் நிற்கும் ராகு பகவானால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் கருத்து ஒருமித்து வாழக்கூடிய நாட்கள் வந்துவிட்டது.உங்களை அவமானப்படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து மீளக்கூடிய காலம் வந்துவிட்டது.
ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)
கடக ராசிக்கு 3,12ம் அதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்மன நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.எதிர்காலத்தில் வரக்கூடியதை அறியக்கூடிய உள்ளுணர்வு அதிகரிக்கும்.ஆவணம் தொடர்பான பிரச்சனைகள் அகலும். உடன் பிறந்தவர்களால் சில மன உளைச்சல் வரலாம்.சாதகமான இடப்பெயர்ச்சிகள் நடக்கும்.
26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து ராசியில் சஞ்சரிப்பார்கள். சொத்து பத்திரத்தை குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று அதிக வட்டிக்கு கடன் கொடுக்கக் கூடாது.அசலும் வட்டியும் வராமல் அடமான பொருளை இழக்க நேரும் என்பதால் சிந்தித்து செயல்படுவது அவசியம். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.
மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(1.11.2026 முதல் 13.12.2026 வரை)
அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் முக்தி மோட்சம் மறுபிறவி பாவம், புண்ணியம் பற்றிய எண்ணங்கள் சிந்தனைகள் உருவாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வு பெறலாம். ஆன்மீக யாத்திரைகள் சென்று வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது.காது மூக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைகளுக்கு உரிய மருத்துவர் அணுக வேண்டும் கடன் வாங்குவதையும் கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் எல்லா முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும்.
பரிகாரம்
கடக ராசியினர் மாதம் ஒருமுறை புனித நீர் நிலைகளில் நீராடுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வைத்து வழிபட ஜென்ம குருவால் ஏற்படக்கூடிய மன சஞ்சலம் அகலும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406