செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்களை கண்டறிய கூகுளின் புதிய 'SynthID Detector' தள வெளியீடு

ஆப்பிள் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் புகைப்படங்களை கண்டறியும் ஆதரவும் விரைவில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SynthID Detector
Published on: 
Summary

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ கோப்புகளை எளிதாகக் கண்டறியும் SynthID Detector எனும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவசமாக வெளியிட்டுள்ளது

இன்றைய டிஜிட்டல் உலகில் போலி புகைப்படங்கள் மற்றும் போலி வீடியோக்களின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இணையத்தில் காணப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் கூகுள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது . ஆரம்பத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த அம்சம் தற்போது உலகளவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் திறக்கப்பட்டுள்ளது

கூகுளின் ஜெமினி, இமேஜன் போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மூலம் புகைப்படங்கள் அல்லது ஆடியோக்கள் உருவாக்கப்படும் போதே, மனிதக் கண்களுக்குத் தெரியாத டிஜிட்டல் வாட்டர்மார்க்கை கூகுள் அதில் பதித்து விடுகிறது. பயனர்கள் SynthID Detector இணையதளத்தில் உள்நுழைந்து, தாங்கள் சரிபார்க்க விரும்பும் படம், வீடியோ அல்லது ஆடியோ கோப்பை பதிவேற்றம் செய்து பரிசோதிக்கலாம். கூகுள் தவிர OpenAI, NVIDIA மற்றும் Kakao ஆகிய முன்னணி நிறுவனங்களின் AI கருவிகளால் உருவாக்கப்பட்ட வாட்டர்மார்க்குகளையும் இந்தத் தளம் அடையாளம் காணும்.

ஆப்பிள் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் புகைப்படங்களை கண்டறியும் ஆதரவும் விரைவில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், இதில் சில வரம்புகளும் உள்ளன. வெவ்வேறு நிறுவனங்கள் மாறுபட்ட வாட்டர்மார்க்கிங் முறைகளைப் பயன்படுத்துவதால், அனைத்து AI உள்ளடக்கங்களையும் இதனால் 100 சதவீதம் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது.

மேலும், ஒரு புகைப்படம் முழுமையாக AI மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையான புகைப்படம் AI மூலம் திருத்தப்பட்டதா என்பதை இது தெளிவாகப் பிரித்துக் காட்டாது. தொழில்நுட்ப நிறுவனங்கள் பொதுவான தரநிலைகளை உருவாக்கும் வரை இத்தகைய கருவிகள் முழுமையான தீர்வாக அமைய முடியாது என்ற போதிலும், இணையப் பாதுகாப்பிலும் போலிகளை அடையாளம் காண்பதிலும் இது ஒரு முக்கியப் படியாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com