

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் உள்ள ஐச்சி நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள ஸ்டேடியத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், லேசர் ஜாலங்கள் இடம்பெற்றன. இதில் 45 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து வந்தனர்.
இந்திய அணியை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ஐச்சி நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்தியக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அளப்பரிய கடின உழைப்பையும், சிறப்பான அர்ப்பணிப்பு உணர்வையும், உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளனர்; இந்தியா அவர்கள் குறித்துப் பெருமை கொள்கிறது.
அவர்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி, சிறப்பாக விளையாடி, சிறந்து விளங்கட்டும்! என பதிவிட்டுள்ளார்.