

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
டெல்லியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக இருந்தது.
கேப்டன் இப்ராகிம் ஜத்ரன் அதிகபட்சமாக 33 பந்தில் 37 ரன்னும் (6 பவுண்டரி), ரஷீத் கான் 16 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். நிதிஷ் குமார் ரெட்டி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், பும்ரா, அக் ஷர் படேல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 31 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 160 ரன் இலக்கை எடுத்தது. 14.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சன் 22 பந்தில் 57 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்), அபிஷேக் சர்மா 19 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), இஷான் கிஷன் 23 பந்தில் 38 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ரஷீத் கான் 3 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்திலும் இதே மாதிரி 7 விக்கெட்டில் வீழ்த்தி இருந்தது.
தொடரை வென்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:-
கடந்த ஆட்டத்தை வைத்து இந்த போட்டியில் ஒரு முழுமையான வெற்றியை எதிர்பார்த்தோம். அதே மாதிரி இந்த ஆட்டம் சிறப்பாக அமைந்தது.
கேப்டனாக என்னுடைய பயணத்தில் ஏற்றம் - இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்தது.
கேப்டனாக என்னுடைய பயணத்தை தொடங்கிய போது கசப்பாக அமைந்தது. அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய பயணம் எப்போதுமே ஒரு ரோலர் கோஸ்டர் போல் தான் மேலே கீழே செல்லும்.
எனவே முடிந்தவரை சமநிலையான மனநிலையில் இருக்க வேண்டும். சூழ்நிலையை எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்கிறீர்களோ அவ்வளவு சிறப்பாக அது அமையும்.
3-வது போட்டியில் நிச்சயமாக மாற்றங்கள் இருக்கும். அணியில் உள்ள அனைவரும் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு பயிற்சி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.
இவ்வாறு ஷ்ரேயஸ் அய்யர் கூறினார்.
இந்திய அணி கடந்த ஜூன் மாதம் அயர்லாந்தில் 20 ஓவர் தொடரில் ஆடியது. இந்த தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக அறிமுகம் ஆனார். 2 போட்டியிலும் தோற்று இந்தியா தொடரை இழந்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பயணத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் அணி 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது.
ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. அவர் தலைமையில் வென்ற முதல் தொடராகும். தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சூர்யவன்ஷி, வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ரானா, யாஷ் தாக்கூர் ஆகியோருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்பட வில்லை. நாளைய ஆட்டத்தில் அவர்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை (17-ந்தேதி) நடக்கிறது.