ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை!

கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.
PAK vs IND
Published on: 

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி அபாரம்

13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 227 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக நோமன் சலார்ஜாய், ஷா பைசல் ரஹிமி தலா 51 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் இஷான் சோத் 3 விக்கெட்டும், ஆர்யன் சவானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்து 8 விக் கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஆர்யவிர் ஷேவாக் 51 ரன்னிலும் (57 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் லக்ஷயா ராய்சந்தானி 93 ரன்னிலும் (90 பந்து, 13 பவுண்டரி. ஒரு சிக்சர்) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள்.

வினீத் 57 ரன்னுடனும் (62 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), யாஷ்பர்தான் சவுகான் 16 ரன்னுடனும் ஆட் டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் அபாரம்

மற்றொரு அரை இறுதியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய வங்காளதேச அணி, பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 31.4 ஓவர் களில் 138 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர்கள் ரிஸ்வானுல்லா 5 விக்கெட்டும். முகமது சயாம் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 21.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ஹயம் கான் 69 ரன்னில் ஆட்டமிழந்தார்.

உஸ்மான் கான் 64 ரன்னுடனும், அப்துல் காதிர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இறுதிப்போட்டியில்...

கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய கேப்டன் லக்ஷயா ராய்சந்தானி கூறுகையில், 'இது ஒரு சிறந்த இறுதிப்போட்டியாக இருக்கப்போகிறது. அனைவரும் இதற்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்' என்றார்.

X