

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 368 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 720 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
கே.எல். ராகுல் (136 ரன்), ரிஷப் பண்ட் (128) ஆகியோர் சதமும், கேப்டன் சுப்மன் கில் (98), ஜெய்ஸ்வால் (85) தேவ்தத் படிக்கல் (80), துருவ் ஜூரல் (78) ஆகியோர் அரை சதமும் பதிவு செய்தனர்.
352 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து இருந்தது. கான்வே 59 ரன்னும், ரவீந்திரா 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 233 ரன்கள் பின்தங்கி, கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தது. 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி பந்துவீச்சை தொடர்ந்தது.
நியூசிலாந்து அணியின் 3-வது விக்கெட் ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். கான்வே 65 ரன்னில் அவரது பந்தில் பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 132 ஆக இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் நியூசிலாந்தின் 4-வது விக்கெட் சரிந்தது. ரவீந்திரா 37 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட் ஆனார்.
மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்து இருந்தது. மிச்சேல் 8 ரன்னிலும், டாம் பிளண் டெல் 14 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இந்த ஜோடியை கம்போஜ் பிரித்தார். பிளன்டெல் 15 ரன்னில் அவரது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அப்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 176 ஆக இருந்தது. 6-வது விக்கெட்டான மிச்சேல்-பிலிப்ஸ் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் ஆடியது. 87.5 ஓவரில் அந்த அணி 200 ரன்னை தொட்டது.
தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து இருந்தது. மிச்சேல் 23 ரன்னிலும், பிலிப்ஸ் 21 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இந்த ஜோடி மிகவும் பொறுப்புடன் விளையாடி நியூசிலாந்து அணியின் தோல்வியை தவிர்த்தது. இந்த ஜோடியை கடைசி வரை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள்.
இன்று காலையில் இருந்து இந்திய பந்து வீச்சாளர்களால் 3 விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணிகளும் முடிவு செய்தன.
இதைதொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. மிச்சேல் 49 ரன்னும், பிலிப்ஸ் 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 27-ந்தேதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்குகிறது.