

இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் ஆட்டம், 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுடன் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
நியூசிலாந்து அணி கடைசியாக வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து இருந்தது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த மார்ச் 8-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா 96 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் சவாலானது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடிய வீரர்களே பெரும்பாலும் இதில் இடம் பெறுவார்கள். தேவைப்பட்டால் சில மாற்றங்கள் இருக்கலாம். பந்துவீச்சில் மிகுந்த முன்னேற்றம் தேவை.
நியூசிலாந்து ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் கூடுதலான வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கலாம்.
பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அதிரடியான பேட்டிங்கை பொறுத்தே அணியின் நிலை இருக்கிறது.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணியில் டிம் ஷெய் பெர்ட், பின் ஆலன், கான்வே, டேரில் மிச்சேல், கேப்டன் சான்ட்னெர் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 31 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 17-ல், நியூசிலாந்து 11-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் டை ஆனது.
நாளைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.