நண்பனிடம் அவுட் ஆவதும் சந்தோஷம் தான்: கோலியுடன் Fun செய்த இஷாந்த் சர்மா- வைரல் வீடியோ

இஷாந்த சர்மா ஓவரில் விராட் கோலி 2 சிக்சர் 1 பவுண்டரி விளாசினார்.கடைசியில் விராட் கோலி விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தி அவரை கிண்டலடிப்பார்.
நண்பனிடம் அவுட் ஆவதும் சந்தோஷம் தான்: கோலியுடன் Fun செய்த இஷாந்த் சர்மா- வைரல் வீடியோ
Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி தரப்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இஷாந்த் சர்மா பந்து வீச வரும் போது விராட் கோலியிடம் வம்பு இழுப்பார். அந்த ஓவரில் முதல் பந்தை விராட் பவுண்டரியும் 2-வது பந்தை சிக்சரும் விளாசுவார். உடனே இஷாந்த் சர்மாவை பார்த்து விராட் கோலி சிரித்தபடி ஏதோ கூறுவார். அதனை தொடர்ந்து வீசிய பந்தை டாட் பந்தாகவும் அடுத்த பந்தை வைடு பந்தாகவும் இஷாந்த் வீசுவார்.

4-வது பந்தில் விராட் கோலியை இஷாந்த் சர்மா அவுட் செய்வார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா விராட் கோலியை சிரித்தப்படி கிண்டல் செய்வார். விராட் கோலியும் பதிலுக்கு சிரித்தபடியே கடந்து செல்வார். நண்பனிடம் அவுட் ஆவதும் சந்தோஷம்தான் என்பது போல விராட் சிரித்தப்படி செல்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனை தொடர்ந்து டெல்லி அணியின் கடைசி விக்கெட்டாக இஷாந்த் சர்மா களத்திற்குள் வருவார். அவர் வரும்போதில் இருந்தே விராட் கோலி கிண்டலடித்து கொண்டே இருப்பார். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக இதுபோல நண்பர்கள் இந்த வீடியோவை தனது நண்பர்களை Tag செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com