

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
ரிங்கு சிங்-பிரியா சரோஜ் ஜோடியின் திருமணம் டிசம்பர் 4-ம் தேதி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல 'ரமாடா' நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி லக்னோவில் உள்ள 'தி சென்ட்ரம்' ஹோட்டலில் இருவருக்கும் மிகவும் விமரிசையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ரிங்கு சிங் உத்தர பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது, இந்திய டி20 அணியின் முக்கிய பினிஷராகத் திகழ்ந்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் மசாலிஷஹர் தொகுதி எம்.பி.யான பிரியா சரோஜ், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் மிக இளம் வயது எம்.பி.க்களில் ஒருவராக நாடாளுமன்றத்திற்குத் தேர்வானவர். இவர் முன்னாள் எம்.பி. தூபானி சரோஜின் மகள் ஆவார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார். மேலும், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்.
இந்தத் திருமண விழாவில் முக்கிய கிரிக்கெட் வீரர்கள், சமாஜ்வாதி கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், நெருங்கிய உறவினர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.