இன்று 3வது டி20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

புவனேஷ்வர் குமார் இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.
IND Team
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இந்தப் போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் 226 ரன் இலக்கை எடுத்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் தடுமாற்றத்தில் இருந்து மீண்டு த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி மாற்றங்கள்:

இன்றைய போட்டிக்கு இஷான் கிஷன் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இடம் பெற்றால் சூர்யவன்ஷி அணியில் இடம்பெறுவது சந்தேகமாகிவிடும்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறார். இவர் இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மயங்க் யாதவ் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடியில் நியூசிலாந்து:

சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்த போட்டியில் வென்றாக வேண்டிய நெருக்கடி உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் ஃபின் ஆலன் , கிளன் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப் ஆகியோர் மிகவும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பிலிப்ஸ் தொடர்ந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

இரு அணிகளும் டி20 போட்டிகளில் இதுவரை 33 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 18 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 12 பட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com