

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறார். 37 வயதானாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் போட்டியில் சதம் விளாசினார்.
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியுடன் டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் முடிவடைந்ததையும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் இன்னும் சிறிது காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் சிறிது காலம் விளையாடியிருக்கலாம் என கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கபில்தேவ் கூறியதாவது:-
கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தார். ஒரு பார்வையாளராகவும், முன்னாள் கிரிக்கெட் வீரராகவும் நான் கருதுவது என்னவென்றால், அவரிடம் அதற்கான திறமை இருந்ததால் அவர் இன்னும் சில காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்க வேண்டும்.
இன்று அவர் இது குறித்து வருத்தப்படுகிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர் விளையாடுவதை நிறுத்திவிட்டார். ஆனால், இன்னும் சில ஆண்டுகளில், ஏன் இன்னும் சிறிது காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கக்கூடாது? என்று அவர் நிச்சயமாக உணர்வார் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 9230 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 46.85 ஆகும். 31 அரைசதங்களும் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் அடித்துள்ளார்.