

தேனி:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடி), சையதுகான் (கம்பம்), லோகிராஜன் (ஆண்டிப்பட்டி), முருகன் (பெரியகுளம்-தனி) ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு போடியில் பிரசாரம் செய்தார்.
போடி தேவர் சிலை முன்பு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
போடி தொகுதி வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர் இந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடுபவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க. தொண்டர்களின் ரத்தம் வியர்வையாக சிந்தியதில் இருந்து முகவரி பெற்றவர் தான் தங்கதமிழ்செல்வன். அவர், அ.தி.மு.க.வில் இருந்தபோது 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்தார். அந்த பதவிகள் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகளின் உழைப்பால் கிடைத்தது. இல்லையென்றால் நாட்டுக்கு அவர் யாரென்றே அடையாளம் தெரியாது.
துரோகம் செய்த தங்கதமிழ்செல்வனுக்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது. அது தான் சரியான தண்டனையாக இருக்கும். ‘நன்றி மறப்பது நன்றல்ல’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர்., யாரை தீய சக்தி என்று சொன்னாரோ, யாரை எதிர்த்தாரோ, எந்தக்கட்சியை தமிழகத்தை விட்டு அகற்ற வேண்டும் என்று சொன்னாரோ அந்த கட்சியில் சேர்ந்த தங்கதமிழ்செல்வனுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
தி.மு.க.வினர் பொய் சொல்லி மக்களை குழப்பி வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர துடிக்கின்றனர். ஆனால் தமிழக மக்கள் சிந்திக்க கூடியவர்கள். சிந்தித்து வாக்களிப்பார்கள். ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது. அவர் ஒரு பெட்டியை தூக்கிக்கொண்டு குறை கேட்கிறேன் என்று மனுக்களை பெற்று அந்த பெட்டியில் வைத்து எடுத்துச்செல்கிறார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அந்த குறைகளை எல்லாம் தீர்த்து விடுவேன் என்கிறார். இது நடக்கின்ற காரியமா?
கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தார். ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது எல்லாம் மக்கள் அவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை. இப்போது தேர்தல் வந்துவிட்டதால் ஊர் ஊராக சென்று மக்களை குழப்புகிறார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது நாட்டு மக்களுக்கு தி.மு.க. நல்லது செய்யவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களை குழப்பி சூழ்ச்சி செய்து தி.மு.க.வினர் கபடநாடகம் நடத்துகின்றனர். இந்த நாடகம் மக்களிடம் எடுபடாது.
ஆண்டிபட்டியில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். கைத்தறி நெசவாளர்கள் பெற்றுள்ள ரூ.1 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். 750 யூனிட் இலவச மின்சாரம் என்பது 1,000 யூனிட் ஆக உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்கள் மழைக்காலங்களில் வேலையின்றி தவிக்கும் நிலை உள்ளது. நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரிசி பெறும் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர், வாஷிங் மெஷின் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் மகளிர் 6 சவரனுக்கு குறைவான நகைகளை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.