

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட டி20 தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (அக். 24) நடக்கிறது. முதல் போட்டியை போன்றே இன்றைய ஆட்டத்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தொடரில் 2-0 என்ற முன்னிலையை பெறும் ஆர்வத்தில் களமிறங்குகிறது. இதேபோன்று நியூசிலாந்து அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் களமிறங்கும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் என்ற கடின இலக்கை வெற்றிகராக துரத்திய இந்திய அணி சாதித்தது. இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா நல்ல தொடக்கம் கொடுக்க அடுத்தடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நமன் திர், அக்ஷர் படேல் ஆகியோர் நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றம் இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோரை பாதித்தது. அணி வெற்றி பெற்றுவிட்டதால் அதில் பிரச்சினை இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பிய புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.