

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 3 ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் இரண்டு ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், வெல்லிங்டனில் நடந்த 3-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.
இந்தநிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றும் என்று திலக் வர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
3-வது வரிசையில் நான் களம் இறங்கியபோதும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து உள்ளேன். தற்போது 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்கும் போது முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் எப்போதும் ஒரு ரன் அல்லது இரண்டு ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவேன். இறுதிக்கட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்களே கூடுதலான அழுத்தத்தில் இருப்பார்கள். அப்போது அவர்கள் அதிக ரன்களை வழங்கலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்ற இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
4-வது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு. தொடரை முழுமையாக வென்று ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.