

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது தேசிய கீதத்திற்கு பதிலாக வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது இந்திய அணியினர் முதலாவதாக வந்தே மாதரத்தையும், இரண்டாவதாக தேசிய கீதத்தையும் பாடினர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் அணிவகுத்து நின்றபோது, முதலில் 'வந்தே மாதரம்' பாடலின் 6 சரணங்களும், அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய கீதமும், இறுதியாக இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலும் இசைக்கப்பட்டன.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முழுமையான 6 சரணங்களும் இசைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி அரசு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். ஆனால் விலக்கு அளிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறையிலும் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய 13.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.
இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.