

குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர, கர்நாடக அரசு நடத்தும் பிற நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று அம்மாநிலத்திலுள்ள காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்து மாநில அமைச்சரவை எடுத்த முடிவை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்:
தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும்போது, 'வந்தே மாதரம்' பாடலின் அனைத்து 6 சரணங்களையும் பாட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இருப்பினும், 'வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக 1937-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கடைப்பிடிக்க காங்கிரஸ் செயற்குழு ஆகஸ்ட் 19 அன்று முடிவு செய்தது; அந்தத் தீர்மானத்தின்படி, கட்சியின் நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்.
கட்சி நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாக பாடாமல் அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.க. குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்கள்:
செப்டம்பர் 8 தேதியிட்ட மாநில அரசின் உத்தரவின் முன்னுரையில், இந்திய தேசிய இயக்கத்தின் போது தேசியம், ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வளர்ப்பதில் 'வந்தே மாதரம்' பாடல் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் மற்றும் பல்வேறு அரசு மற்றும் பொது விழாக்களில் அதனைப் பாடுவதற்கான அல்லது இசைப்பதற்கான நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய பாடலை இசைப்பதற்கும், கூட்டாக பாடுவதற்கும் ஏற்ற நிகழ்வுகளை அந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.