

எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். ராசியிலிருந்து கேது பகவான் வெளியேறி விட்டார். ராசியில் குரு செவ்வாய் சேர்க்கை உள்ளதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரம் பெருகும். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் அரசு வகை ஆதாயம் உண்டு. கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. சொத்து வாங்கும், விற்கும் முயற்சிகள் ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த மகள் மகனுக்கு வேலை கிடைத்து விடும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். இந்த காலகட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. உங்கள் நேர்மறை மனப் போக்கால் கெட்டவை நல்லதாக மாறும். மாமனார் மூலம் சகாயமான பலன்கள் உண்டு. மகிழ்ச்சியை அதிகரிக்க காலபைரவருக்கு முந்திரி மாலை சாற்றி வழிபடவும்.
மன நிறைவான வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். வேதனைகளை விரட்டி சாதனைகளாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது. தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். சிலர் உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் ஒப்பந்தத்தில் கவனம் தேவை. அரசியல் தொடர்புடையவர்களுக்கு வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம். கண்டகச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். பார்த்துச் சென்ற வரனிடம் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழிபடவும்.
நிறைவான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார்.கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.அமைதியான சூழல் நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் வாரம். கடல் தாண்டிச் செல்லும் யோகம் உள்ளது. எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். திருமணமான இளம் வயது பெண்கள் கருவுறுவார்கள்.அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜயோக காலமாகும்.வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் செயல்படவும். மாற்றுமுறை வைத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும். எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 2,5ம் அதிபதி குருவுடன் இணைந்து பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள். ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய வேலை கிடைக்கும். தடைப்பட்ட சம்பள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். மாமியாரின் பாராட்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும். மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். எதிரிகள் தொல்லை நீங்கும். நம்பிக்கையும், பலமும், தைரியமும் அதிகரிக்கும். இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபடவும்.