2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் விரயத்தை கட்டுப்படுத்த முடியும்.
rasipalan
Published on: 

சிம்மம்

விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ஏக யோகாதிபதி செவ்வாய் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் நீச்ச நிலையில் உள்ளார். வருமானத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை இல்லை. தீபாவளிக்காக ஆடம்பர வீண் செலவுகளை அதிகரிப்பீர்கள். விடுமுறைக்கு ஆன்மீக பயணம் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் விரயத்தை கட்டுப்படுத்த முடியும். காதல் விவகாரங்கள் மன அமைதியை குறைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக வைத்தியம் செய்வீர்கள். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும். கடனை தீர்க்கும் வகையில் வருமானம் உயரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரும். தந்தை, தந்தை வழி உறவுகளால் நன்மைகள் கூடும். தொழிலில் மன நிம்மதி, மன நிறைவு அடைவீர்கள். இளம் பருவத்தினருக்கு திருமணம் நடக்கும். அண்டை அயலாருடன் சிறு மன பேதம் சீராகும். பகைவர்களும் நண்பர்களாக மாறும் காலம். சிவனடியார்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வஸ்திரதானம் வழங்கவும்.

கன்னி

சாதகமான வாரம். 2,9ம் அதிபதி சுக்ரன் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். சிலருக்கு பரம்பரை கௌரவப் பதவிகள் அரசியல் யோகம் உண்டு. எதிரிகள் ஓடி ஒளிவார்கள். இதுவரை உங்களின் ஆலோசனைக்கு செவி சாய்க்காத குடும்பத்தினர் உங்களின் அருமை பெருமைகளை உணர்வார்கள். வரும் நாட்களில் குடும்ப பிரச்னைகள் அனைத்தும் நல்ல முறையில் தீரும். திருமணத் தடை அகன்று திருமணம் நடைபெறுவதற்கான உறுதி நிகழ்வுகள் நடைபெறும். சிலருக்கு பெற்றோர் வழியில் செலவுகள் வரும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எல்லாம் சரியாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். கவலைகள் விலகி இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். தீபாவளி பண்டிகைக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை தானம் வழங்கவும்.

துலாம்

பல்வேறு புதிய அனுபவங்களை சந்திக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் நீச்சபங்க ராஜயோக நிலையில் உள்ளார். 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை உள்ளது. தன யோகம் சிறப்பாக அமையும். குடும்ப உறவுகளிடம் இணைவும் பாசமும் அதிகரிக்கும். விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரம் அமோகமான லாபத்தை கொடுக்கும். உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். மனநிறைவு, நிம்மதி ஏற்படும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழிலுக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் நினைத்த இடமாற்றம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனையை பொறுமையாக கையாளவும். பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். சொத்துக்களை விற்று கடன் அடைக்க ஏற்ற நேரம். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். மாற்று முறை வைத்தியம் நல்ல பலன் தரும். தீபாவளி போனஸில் சில அலங்காரப் பொருட்கள் வாங்கி வீட்டை அலங்கரிப்பீர்கள் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். சுமங்கலி பெண்களுக்கு தீபாவளியை முன்னிட்டு மஞ்சள் நிற ஆடை தானம் வழங்கவும்.

விருச்சிகம்

சுமாரான வாரம். ராசி அதிபதி செவ்வாய் நீச்சமாக உள்ளார். 2,5ம் அதிபதி குரு பத்தாம் இடத்தில் கேது உடன் அதிசாரமாக உள்ளார். மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை பற்றிய கவலைகள் வந்து செல்லும். புதிய வேலைக்கான முயற்சியில் சில தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் சில நேரங்களில் குடும்ப உறவுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரிடும். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். சிலர் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகும். திட்டமிட்ட திருமணங்கள் சிலருக்கு தள்ளிப் போகலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். புதிய எதிரிகள் உருவாகுவார்கள். நம்பியவர்களே முதுகில் குத்தும் நேரம் என்பதால் சிந்தித்து செயல்பட வேண்டும். அஜீரணக்கோளாறு ஏற்படும் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. காவல்துறை, ராணுவத்தில் பணிபுரிபவர்களின் தனித்திறமைக்கு தகுந்த பாராட்டுகள் கிடைக்கும். அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு இனிப்பு தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X