வெற்றி தரும் விநாயகர் சதுர்த்தி பூஜை கடைபிடிப்பது எப்படி?

எந்த பூஜை தொடங்கும் முன்னரும் மஞ்சளில் விநாயகர் பிடித்து வழிபட்டு அதன் பிறகே பிரதான பூஜையை தொடர வேண்டும் என்பது ஐதீகம்.
 vinayagar
Published on
Summary

விநாயகருக்கு நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு. விநாயகர் சதுர்த்தி அன்று அவரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஓர் ஆண்டில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் தலையாயது ஆவணி மாதம் வரும் சதுர்த்தி. பிற சதுர்த்திகளில் வழிபடாதவர்கள்கூட ஆவணி வளர்பிறையில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும். எனவே தான் அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்றே அழைத்து கொண்டாடுகிறோம். காரணம் ஆவணி சதுர்த்தி அன்று தான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம்.

பிடித்து வைத்தால் பிள்ளையார்

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பது ஆன்றோர் வாக்கு. சந்தனமோ சாணமோ மஞ்சளோ தூய மனதுடன் எடுத்து பிடித்து வைத்து மஞ்சள் குங்குமம் சாத்தி வணங்கினால் அதில் பிள்ளையார் ஆவாகனமாகி அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை. எந்த பூஜை தொடங்கும் முன்னரும் மஞ்சளில் விநாயகர் பிடித்து வழிபட்டு அதன் பிறகே பிரதான பூஜையை தொடர வேண்டும் என்பது ஐதீகம்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி அன்று, காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து, நல்ல நேரத்தில் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை வீட்டுக்கு கொண்டு வர வேண்டும். பூஜை செய்ய உகந்த நேரத்தினை அறிந்துகொண்டு அந்த நேரத்தில் பூஜையை தொடங்க வேண்டும். மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்ய வேண்டும். அதன்பிறகு கற்பூரம் காட்டி நம் வேண்டுதலை சொல்லி பின் விநாயகர் சதுர்த்தி பூஜை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொள்ள வேண்டும்.

விநாயகருக்கு சிறு வஸ்திரம்

பின்பு புதிதாக வாங்கிய விநாயகருக்கு சிறு வஸ்திரம், மலர், சந்தனம், குங்குமம் ஆகியன சமர்ப்பித்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு விநாயகர் அஷ்டோத்திரம் அறிந்தவர்கள் மலர்கள், அருகம்பூ முதலியன கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அறியாதவர்கள், விநாயகர் அகவல் பாடி ஒவ்வொரு வரி முடிவிலும் மலர் சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு மோதகம் செய்து நிவேதனம் செய்வது விசேஷம். பின்பு கற்பூர ஆரத்தி காட்டி விநாயகர் பூஜையை நிறைவு செய்யலாம்.

விநாயகருக்கு அருகம்புல் மாலை

கட்டாயம் மாலை வேலையில் சதுர்த்தி பிறையை தரிசித்து, விநாயகரை வணங்க வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் மாலை, தும்பைபூ மற்றும் எருக்கம்பூ சாற்றி வழிபடலாம். மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல், பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய்,விளாம்பழம், வாழைபழம், கொய்யா, மாதுளை, லட்டு மற்றும் சுண்டல் இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு. விநாயகர் சதுர்த்தி அன்று அவரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

X

Maalai Malar
www.maalaimalar.com